அமெரிக்கா சென்று உயர்கல்வி பயிலும் இந்தியர்களின் எண்ணிக்கை உயர்வு!
அமெரிக்காவுக்கு உயர்கல்வி பயில்வதற்காக செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 35% உயர்ந்துள்ளது.
இது தொடர்பான ஆய்வு தரவுகளை சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரக துணைத் தூதர் கிறிஸ்டோபர் டிபிள்யு ஹோட்ஜஸ் வெளியிட்டார். தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“2021-2022-ம் கல்வியாண்டில் அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 182 ஆக இருந்த நிலையில், அது 2022-2023-ம் கல்வியாண்டில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 923-ஆக அதிகரித்துள்ளது. அதில் இளநிலை கல்வி பயில சென்ற மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் 16 சதவீதம் (31,954) உயர்ந்துள்ளது.
சீன மாணவர்களுக்கு அடுத்ததாக (2.90 லட்சம்) அமெரிக்காவில் அதிகம் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் இந்தியர்கள்தான். அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த கல்வியாண்டில் 12 சதவீதம் அதிகரித்திருக்கிறது. வணிகம், மேலாண்மை, பொறியியல், கணினி அறிவியல் ஆகிய துறைகளை அதிகளவிலான மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.
அமெரிக்காவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர். அதில் 25 சதவீதத்துக்கும் மேல் இந்திய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த கல்வி, அதிகளவிலான கல்வி ஊக்கத் தொகைகள், மேம்பட்ட ஆய்வகங்கள், பணி வாய்ப்பு என பல்வேறு சிறப்பம்சங்களால் அமெரிக்காவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
உயர் கல்வி பயில்வதற்கு அமெரிக்காவை தேர்வு செய்த இந்திய மாணவர்கள் மிகச் சிறந்ததொரு முதலீட்டை முன்னெடுத்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவையும், நல்ல எதிர்காலத்தையும் இத்தகைய நடவடிக்கைகள் மேலும் நெருக்கமாக்கியுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.