"தேர்தலில் அதிகார பலத்தை எதிர்த்து புதிதாக வந்தவர்கள் வெற்றி பெற்றனர்" - தவெக தலைவர் விஜய்!
தமிழக அரசியல் களத்தில் புதிய வரவாகக் கால்பதித்துள்ள தமிழக வெற்றி கழகம் மக்கள் மத்தியில் தங்கள் ஆதரவுத் தளத்தை விரிவாக்கும் நோக்கில் புதிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அக்கட்சியின் உறுப்பினர் சேர்க்கைச் செயலி (Membership App) இன்று முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று சென்னை, பனையூரில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் செயலியை அறிமுகம் செய்து வைத்தார். இந்தச் செயலியானது, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆர்வலர்களும், ஆதரவாளர்களும் எளிதில் தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினராக இணைந்துகொள்ள உதவும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து விஜய் நிகழ்ச்சியில் பேசுகையில்,
"இதற்கு முன் தமிழக அரசியலில் நடந்த இரண்டு மிகப்பெரிய தேர்தல் 1967, 1977 போன்று 2026ல் அமைய போகிறது என்று நாம் உறுதியாக சொல்லிக் கொண்டிருக்கின்றோம். இரண்டு மாபெரும் தேர்தலில் ஏற்கனவே தொடர்ந்து வெற்றி பெற்றவர்களின் அதிகாரம், பலம், அசுர பலம் எல்லாத்தையும் எதிர்த்து புதிதாய் வந்தவர்கள் வென்றுள்ளனர்.
எப்படி ஜெயித்தார்கள் என்று பார்க்கும்போது சிம்பிள் லாஜிக். ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீடுக்கு வீடு அப்படி எல்லா மக்களையும் சந்தித்து. அறிஞர் அண்ணா சொன்னது தான் இங்கு சொல்ல விரும்புகிறேன். மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக் கொள், மக்களிடம் வாழு, மக்களிடம் சேர்ந்து திட்டமிடு இதை சரியாக செய்தாலே போதும் வெற்றி பேரணி தமிழ்நாடு.
அதன் அடிப்படையில் செய்தாலே எல்லா குடும்பங்களையும் உறுப்பினர்களையும் சேர்த்தால் நாம் வெற்றி பெற முடியும். அதற்காக தான் my tvk செயலியை அறிமுகப்படுத்துவதில் சந்தோஷம் அடைகிறேன். இதன் பின் மதுரை மாநாடு மக்கள் சந்திப்பு பயணம் தொடர்ந்து மக்களோடு மக்களாக இருக்க போகிறோம். இதற்கான வேலையை நாம் இப்பொழுதே தொடங்க வேண்டும், நம்ம கூட மக்கள் இருக்கிறார்கள், நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்" என்று தெரிவித்துள்ளார்.