Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம்!

07:36 AM Jun 11, 2024 IST | Web Editor
Advertisement

திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

Advertisement

தலைநகர் சென்னைக்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த திருச்சி விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,112 கோடியில் புதிய முனையம் அமைக்க திட்டமிடப்பட்டு 2019ம் ஆண்டு காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி வைத்தார். அதனைத்தொடர்ந்து 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகள் முடிவுற்று கடந்த ஜனவரி மாதம் 2-ந் தேதி பிரதமர் மோடி புதிய முனையத்தை நேரில் வந்து தொடங்கி வைத்தார்.

புதிய முனையம் திறக்கப்பட்டாலும் அதிநவீன தொழில் நுட்ப மேம்பாட்டுப் பணிகள் இது நாள்வரை நடைபெற்று வந்தது. அந்தப் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதை தொடர்ந்து புதிய முனையத்தில் விமான போக்குவரத்து இன்று (11-06- 2024) முதல் தொடங்கப்படும் என திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனையத்தின் மூலம் ஆண்டுக்கு 4.5 மில்லியன் (45 லட்சம்) பயணிகளை கையாள முடியும். இந்த புதிய முனையம் செயல்பட தொடங்கியபின்னர் ஒரு மணி நேரத்திற்கு 12 விமானங்கள் தரையிறங்கியும் புறப்பட்டு செல்லும் வசதிகள் உள்ளது. ஒரு நாளில் (24 மணி நேரத்தில்) குறைந்தபட்சம் 240 விமானங்கள் வந்து செல்லும் வகையில் தொழில் நுட்ப வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புதிய முனையம் 75,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 750 கார்கள், 250 வாடகைக் கார்கள், 10 பேருந்துகள் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. புறப்பாடு மற்றும் வருகைக்காக 10 ஏப்ரான்கள், ஏரோபிரிட்ஜ்கள், குடியேற்றப்பிரிவில் (இமிகிரேஷன்) செக் இன் மற்றும் செக் அவுட் என தலா 40 கவுண்டர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு 3 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பயணிகளின் உடமைகளை எடுத்து வர
கண்காணிக்கும் 15 எக்ஸ்ரே இயந்திரங்களுடன் கூடிய சாய்வுதள கன்வேயர் (பெல்ட்கள்) சாதனம் அமைக்கப்பட்டுள்ளது.

இவற்றின் மூலம் 10 விமானங்களில் வருகை தரும் மற்றும் புறப்பட்டுச் செல்லும் சுமார் 3,000 பயணிகளை ஒரே நேரத்தில் கையாள முடியும். அதிநவீன வசதிகளுடன் கூடிய கண்காணிப்பு காமிராக்கள் பொருத்திய கோபுரம் மூலம் விமான ஓடு தளத்தில் எந்த ஒரு பகுதியையும் 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்க முடியும். திருச்சி விமான நிலைய இரண்டாவது புதிய முனையத்திற்க்கு இன்று (11-ந் தேதி) காலை 6.40 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து வரும் இண்டிகோ விமானம் முதலாவது விமானமாக தரையிறங்கும். அதேபோல திருச்சியிலிருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் புதிய முனையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும் முதல் விமானமாக இருக்கும் என தெரிவித்தார்.

Tags :
New TerminalTrichyTrichy International Airport
Advertisement
Next Article