“சுதந்திர போராட்ட தலைவர்கள் பெயர்கள் தமிழ்நாடு பாட புத்தகத்தில் இல்லை, ஆனால் திராவிட இயக்க வரலாறு நிறைந்துள்ளது!” - ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு
சுதந்திர போராட்ட தலைவர்கள் பெயர்கள் தமிழ்நாடு பாட புத்தகத்தில் இல்லை, ஆனால் திராவிட இயக்க வரலாறு நிறைந்துள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டியுள்ளார்.
‘தமிழக பாடத்திட்டத்தில் திராவிட இயக்க தலைவர்கள் மற்றும் இயக்கத்தின் வரலாறே நிறைந்துள்ளது. சுதந்திர போராட்ட தியாகிகள், இயக்கங்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. இது எனக்கு வேதனையளிக்கிறது’ என துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகை ராஜ்பவனில் தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இரண்டு நாள் மாநாடு இன்று (மே 28) நிறைவடைந்தது. நிறைவு விழா ராஜ்பவனில் நடந்தது.
இவ்விழாவில், தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி மாநாட்டில் பங்கேற்று துணை வேந்தர்களுக்கு சான்றுகளை வழங்கி பேசியதாவது:
‘இந்தியாவில் கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. எனவே, பல்கலைக்கழகங்கள் தொலைநோக்கு பார்வையோடு செயல்பட வேண்டும். பல்கலைக்கழகங்களை மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
குறிக்கோள்கள் மற்றும் இலக்குகள் நோக்கி செயல்பட வேண்டும். மாணவர்கள் மத்தியில் உயர் கல்வி, வேலை வாய்ப்பு, எதைப்படிக்க வேண்டும் என்பது குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. கல்வியாளர்கள் மாணவர்களை வழிநடத்த வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விழிப்புணவை ஏற்படுத்த வேண்டும். ஆனால், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. 50 சதவீத காலிபணியிடங்கள் உள்ளன. பல கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் தான் பாடம் நடத்துகின்றனர்.
நெட் தேர்வு குறித்து தனியார் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு அதிக விழிப்புணர்வு உள்ளது. அரசு பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை. இதனால் குறைந்த அளவே தேர்ச்சி பெறுகின்றனர். தமிழக பாடத்திட்டத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வேலு நாச்சியார் போன்ற ஒரு சில சுதந்திரப் போராட்ட தியாகிகள் வரலாறு மட்டுமே பாடத்திட்டத்தில் உள்ளது. தமிழகத்தின் பிற சுதந்திரப் போராட்ட தியாகிகள், இயக்கங்கள் குறித்து வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. இது எனக்கு வேதனை அளிக்கிறது.
அதேபோல் தலித் தலைவர்களை பற்றி அதிக வரலாறுகள் இல்லை. ஆனால், திராவிட தலைவர் மற்றும் இயக்க வரலாறே நிறைந்துள்ளது. இது மட்டுமே வரலாறு இல்லை. வரலாற்றை மறைப்பது அவமதிப்பதாகும். உயர் கல்விப் பயிலும் மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களான ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, நானோ தொழில்நுட்பம் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் அறிய வேண்டும். அறியாவிட்டால் நாம் பின் தங்கிவிடுவோம். இதனால், ஏற்றதாழ்வு அதிகரிக்கும்.
தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் உலகில் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துவார்கள். நம் நாடு முன்னேறி வரும் நாடாக உள்ளது. மத்திய அரசின் செயல் திட்டங்கள் சிறப்பாக உள்ளன. தமிழகத்தில் உள்ள மாணவர்கள் திறமையானவர்கள். இவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிப்பார்கள். அவர்களை நீங்கள் சரியான வழியில் வழி நடத்த வேண்டும்’, என்று அவர் பேசினார். விழாவில், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர்.வேல்ராஜ், தேசிய தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் ஜி.அகிலா உட்பட துணை வேந்தர்கள் பங்கேற்றனர்.