“இசை பரிணமித்துக் கொண்டே இருப்பதால் தற்போதைய இசை முந்தைய தலைமுறையினருக்கு ஏற்றதாக இல்லை!” - இசையமைப்பாளர் செல்வகணேஷ்
இசை பரிணமித்துக் கொண்டே இருப்பதால் தற்போதைய இசை முந்தைய தலைமுறையினருக்கு ஏற்றதாக இல்லை என இசையமைப்பாளர் செல்வகணேஷ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 66-வது 'கிராமி' விருது வழங்கும் விழாவில், சிறந்த ஆல்பம் பிரிவில் இந்தியாவின் சக்தி இசைக்குழுவுக்கு கிராமி விருது
வழங்கப்பட்டுள்ளது. இக்குழுவின் ‘திஸ் மொமென்ட்’ என்ற ஆல்பத்திற்காக
இந்தவிருது வழங்கப்பட்டது. சங்கர் மகாதேவன், இசையமைப்பாளர் செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், உஸ்தாத் ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் சக்தி இசைக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
கிராமி விருது பெற்றபின் சென்னை வந்த இசையமைப்பாளர் "செல்வகணேஷ்
விநாயக்ராம்" க்கு சென்னை விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
இசையமைப்பாளர் செல்வகணேசை வரவேற்க வந்தவர்கள் கொன்னகோள் எனும் (சொற்கட்டு) இசை மூலம் வரவேற்பு அளித்தனர்.
பின் செய்தியாளர்களை சந்தித்த இசையமைப்பாளர் செல்வகணேஷ்,
“சக்தி இசை குழு தனது நீண்ட பயணத்திற்குப் பிறகு கிராமி விருதை பெற்றிருப்பது
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எல்லா மனிதர்களுக்குள்ளும் இசை இருக்கிறது. அந்த ரிதம் தான் இசையாக வெளி கொண்டு வரப்படுகிறது. தற்போது உள்ள இளைஞர்கள் உழைக்க தயாராக இருக்க வேண்டும். தலை முறைகளுக்கு ஏற்றவாறு இசையும் தன்னை மாற்றிக் கொள்ளும். அந்த வகையில் தான் தற்போது வரக்கூடிய இசை இதற்கும் முந்தைய தலைமுறையினருக்கு ஏற்றதாக இல்லை” என தெரிவித்தார்.
மேலும் முதலமைச்சரை சந்திக்க வேண்டும் எனவும், அவரிடமிருந்து வாழ்த்து பெற ஆர்வமாக இருப்பதாகவும் இசையமைப்பாளர் செல்வகணேஷ் தெரிவித்தார்.