'மேதகு' திரைப்படத்தின் இசையமைப்பாளர் திடீர் மரணம்! - அதிர்ச்சியில் திரையுலகம்!
தமிழ் இசையமைப்பாளர் பிரவீன் குமார் தனது 28 வயதில் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் 'மேதகு'. இந்த திரைப்படத்தில் குட்டி மணி, ஈஸ்வர் பாஷா, ஆனந்தன், விஜய் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இத்திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளரான பிரவீன் குமார் இசையமைத்து இருந்தார். இத்திரைப்படத்திற்கு இசையமைத்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பிரவீன் குமார். அதைத் தொடர்ந்து ராக்கதன், மேதகு 2, கக்கன், பம்பர், ராயர் பரம்பரை போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.
இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டிற்கு தீவிர வெப்ப அலைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’… இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
இவர், திரைப்படங்களுக்கு மட்டுமல்லாது நண்பர்களின் குறும்படங்களுக்கு இசையமைத்தவர் . இவர் இசையில் மேதகு திரைப்படத்தில் இடம்பெற்ற 'தமிழுக்கு அமுதென்று பேர்' பாடல் கவனம் பெற்றது. சில படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரவீன் குமார் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை 6.30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரவீன் குமாரின் இறுதிச்சடங்கு மாலை 6 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.