தீவிர முயற்சியால் எழுந்து நின்ற தாய் யானை...ஓடி வந்து பால் குடித்த குட்டி யானை!
மருத்துவ குழுவினரின் தீவிர முயற்சியால் தாய் யானை எழுந்து நின்ற நிலையில், குட்டி யானை அதன் அருகில் ஓடி வந்து பால் குடிக்கும் நிகழ்வை அனைவரும் ரசித்து பார்த்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான யானைகள் வசித்து
வருகின்றன. அவ்வப்போது வனப்பகுதிக்குள் செல்லும் வனத்துறை ஊழியர்கள் யானைகள் மற்றும் வன உயிரினங்களின் நடமாட்டங்களை கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை அடிவார சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது யானை பிளிரும் சத்தம் கேட்டதையடுத்து வனத்துறையினர் சென்று பார்த்தனர். அப்போது அப் பகுதியில் பெண் யானை ஒன்று உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்திருப்பதையும், அதனுடன் குட்டி யானை ஒன்று இருப்பதையும் கண்ட வனத் துறையினர் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கும், கால்நடை
மருத்துவர்களுக்கும் தகவல் அளித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை மருத்துவ குழுவினர் யானைக்கு பழங்கள் கொடுத்து 2 வது நாளாக சிகிச்சை அளித்து வந்தனர். இதனிடையே குட்டியானை நகராமல் தாயின் அருகிலேயே நின்று பாசம் போராட்டம் நடத்தியது. அவ்வப்போது குட்டி யானை உடல் நிலை சரியில்லாத தாய் யானையின் மீது ஏறி சுற்றி சுற்றி வந்தது.
இதனையடுத்து வனத்துறை மருத்துவர் சுகுமார் செய்தியாளர்களை சந்தித்தபோது, "யானைக்கு லிவர் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைக்கு யானை கிரேன் உதவியுடன் தான் நிற்கிறது. முழுமையாக குணமடைந்துள்ளதாக சொல்ல முடியாது. தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்" என்றார்.