நீலகிரியில் நடைபெற்ற ‘மொர்டுவெர்த் திருவிழா’ - கோலாகலமாக கொண்டாடிய தோடர் இன மக்கள்!
புத்தாண்டை வரவேற்கும் விதமாக நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடர்
பழங்குடியின மக்கள் மொர்டுவெர்த் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடினர்.
நீலகிரி மாவட்டத்தில் தோடர், குரும்பர், இருளர், பனியர், காட்டு நாயக்கர்,
கோத்தர் என 6 வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் தோடர்
பழங்குடியின மக்கள் உதகை, கோத்தகிரி, குன்னூர், குந்தா உள்ளிட்ட சுற்றுவட்டார
பகுதிகளில் உள்ள அடர்ந்த வனப் பகுதிகளை ஒட்டியுள்ள மந்து எனப்படும் 67
கிராமங்களில் வசித்து வருகின்றனர். விவசாயத்தை மட்டுமே தொழிலாக கொண்ட இவர்கள், எருமைகளை குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்.
இந்நிலையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக, தங்களது பாரம்பரிய கோயில்களான முன்போ மற்றும் ஓடையாள்வோ முன்பு தோடர் பழங்குடியின மக்கள் மொர்டுவெர்த் திருவிழாவை கோலகலமாக கொண்டாடினர். 67 மந்து பகுதியில் இருந்து வந்த தோடர் இன ஆண்கள், தங்களது பாராம்பரிய உடையில் பாடல்கள் பாடியவரே முத்தநாடு மந்து பகுதிக்கு வந்தனர். அப்பகுதியில் உள்ள முன்போ மற்றும் ஓடையாள்வோ கோயில்களில் வழிபாடு நடத்திய பின்னர், அக்கோயில்களின் முன்பும் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்.
பின்னர் இளைஞர்கள் தங்களது வலிமையை வெளிபடுத்தும் விதமாக இளவட்ட கல்லை தூக்கி தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இந்த திருவிழாவில் தோடர் இன பெண்களுக்கு அனுமதி இல்லை. இது குறித்து தோடர் பழங்குடியின மக்கள் கூறுகையில், உலக மக்கள் நலன் பெற வேண்டியும், விவசாய நிலங்கள் செழிக்கவும், காடுகளை பாதுகாக்கவும், தாங்கள் வளர்க்கும் எருமைகள் விருத்தி அடையவும் ஆண்டுதோறும் இந்த மொர்டுவெர்த் திருவிழாவை கொண்டாடி வருவதாக தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடர் இன மக்களின் தற்போதை எண்ணிகை 1,500 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.