“2026 தேர்தலில் மன்னர் ஆட்சியை தமிழ்நாட்டில் ஒழிக்க வேண்டும்” - ஆதவ் அர்ஜுனா மேடைப் பேச்சு!
புதிய வரலாற்றை உருவாக்கும் மேடையாக அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழா மேடை உருவாகி இருக்கிறது என விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற 'எல்லோருக்குமான அம்பேத்கர்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் நடிகரும் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டார். இந்நிலையில் 2026 தேர்தலில் மன்னர் ஆட்சியை தமிழகத்தில் ஒழிக்க வேண்டும் என பேசி உள்ளார் நூலை உருவாக்கியவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் அர்ஜுனா..
இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சரும், இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவருமான அண்ணல் அம்பேத்கர் குறித்த தகவல்கள் இடம்பெற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தகத்தின் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் விகடன் குழும நிர்வாகிகள், விசிக துணைப் பொதுச் செயலாளரும், நூலை உருவாக்கியவருமான ஆதவ் அர்ஜுனா, அம்பேத்கரின் பேரனான ஆனந்த் டெல்டுண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் விஜய். தொடர்ந்து நூலை உருவாக்கியவரும், வாய்ஸ் ஆப் காமன் நிறுவனத்தின் நிறுவனருமான ஆதவ் அர்ஜுனா பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழகத்தில் புதிய கருத்தியல் தலைவராக விஜய் உருவெடுத்து இருக்கிறார். புதிய வரலாற்றை உருவாக்கும் மேடையாக இந்த மேடை உருவாகி இருக்கிறது. பட்டியலினத்தை சாராத ஒருவர் அம்பேத்கரின் புத்தகத்தை வெளியிட வேண்டும் என்பது விசிக தலைவர் திருமாவளவனின் கனவு. விஜய் இந்த புத்தகத்தை வெளியிடுவதன் மூலம் அந்த கனவு நிறைவாகி இருக்கிறது. ஆதிக்கத்துக்கு எதிராக பேசினால் எதிரிகள் உருவாவது இயல்பு தான். தமிழகத்தை கருத்தியல் தலைவர்கள் தான் ஆள வேண்டும்.
இனிமேல் நெஞ்சுக்கு நேராக பேசுவோம். முதுகுக்கு பின்னால் பேச வேண்டாம். பிறப்பால் முதலமைச்சராக ஒருவர் உருவாக்கப்பட கூடாது. எல்லோரும் சமம் என்று சொல்வதுதான் திராவிடம். ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பதை ஏன் பேசக்கூடாது. தமிழகத்தில் சாதிய செல்வாக்கு அடிப்படையில் அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். தமிழகத்தில் இனி மன்னர் ஆட்சிக்கு இடமில்லை. 2026 தேர்தலில் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும். தமிழகத்தில் இனி மன்னர் ஆட்சிக்கு இடம் இல்லை என மக்கள் நினைத்துள்ளனர். ஆனால் இந்த நிகழ்ச்சியில் கால சூழல் காரணமாக திருமாவளவன் பங்கேற்கவில்லை. அவரது எண்ணம் முழுவதும் இந்த நிகழ்ச்சியின் மீது தான் இருக்கும்.
சகோதரர் விஜய்க்கு அரசியல் தெரியுமா? கொள்கைகள் தெரியுமா? என பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. கொள்கைகள் பேசிய பல கட்சிகள் ஏன் அம்பேத்கரை இதுவரை மேடையில் ஏற்றவில்லை? குடிநீரில் புதுக்கோட்டைய அருகே வேங்கைவயல் கிராமத்தில் மனித மலத்தை கலந்தவர்கள் சுதந்திரமாக சுற்றுகிறார்கள். ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்திற்கு விஜய் செல்ல வேண்டும். நீங்கள் களத்துக்கு வாருங்கள். தீண்டாமையை ஒழிப்பது முக்கியமில்லை. சாதியை ஒழிக்க வேண்டும்" இவ்வாறு பேசினார்.