“புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை நள்ளிரவு தேர்வு செய்தது அவமரியாதைக்குரியது” - ராகுல் காந்தி விமர்சனம்!
பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு நாட்டின் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்து வந்தது. ஆனால், கடந்த 2023ஆம் இந்த தேர்தல் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய உள்துறை அமைச்சரை நியமித்து மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் தனியார் அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை நாளை (பிப்.19) நடைபெறவுள்ளது.
இதற்கிடையில் இன்றுடன் (பிப்.18) தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார் ஓய்வுபெறவுள்ள நிலையில், புதிய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய நேற்று பிரதமர் மோடி தலைமையில் தேர்வு குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தற்போதைய தேர்தல் ஆணையர் ஞானேஷ் புதிய தேர்தல் ஆணையராக தேர்வு செய்யபட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுடன் நேற்றிரவு அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் நள்ளிரவில் புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்வு செய்தது அவமரியாதைக்குரியது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்யும் கூட்டத்தில் எனது எதிர்ப்பை தெரிவித்தேன். எந்த தலையீடும் இல்லாமல் சுதந்திரமான முறையில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றேன்.
உச்சநீதிமன்றத்தில் நாளை தேர்தல் ஆணையர் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அவசர அவசரமாக தேர்தல் ஆணையரை நியமித்தது ஏன்? உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கியிருப்பது நாட்டின் கோடிக்கணக்கான வாக்காளர்கள் மத்தியில் தேர்தல் ஆணையம் குறித்த நேர்மை கேள்விக்குறியாகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அம்பேத்கர் போன்ற தேசத் தலைவர்களின் கொள்கைகளை நிலைநிறுத்துவதும், அரசாங்கத்தை பொறுப்பேற்க வைப்பதும் எனது கடமை. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், பிரதமரும், உள்துறை அமைச்சரும் நள்ளிரவில் புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய முடிவெடுத்தது அவமரியாதைக்குரியது”
இவ்வாறு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.