ஆந்திர முதலமைச்சர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் - தெலுங்கு தேசம் கட்சியினரின் தூண்டுதல் பேரில் நடத்தப்பட்டதாக போலீஸ் தகவல்!
ஆந்திர முதலமைச்சர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் தெலுங்கு தேசம் கட்சியினரின் தூண்டுதல் பேரில்தான் நடத்தப்பட்டதாக ஆந்திர போலீஸ் தெரிவித்துள்ளது.
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருக்கும் போது கூட்டத்திலிருந்து கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டது.
ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலும் மக்களவை தேர்தலும் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் போட்டியிட மூன்று அணிகளாக பிரிந்து தேர்தலை எதிர்கொள்கின்றன. ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஒரு அணியாகவும் ஒய்.எஸ்.சர்மிளா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஒரு அணியிலும், எதிர்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி, நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி மற்றும் பாஜக ஆகியவை இணைந்து கூட்டணியாக ஒரு அணியாகவும் தேர்தலை எதிர்கொள்கிறது.
அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட போது ஆந்திர முதலமைச்சரும் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் விஜயவாடாவில், பேருந்தில் பயணித்துக் கொண்டே தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வந்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கூட்டத்தில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது
இதனால், முதலமைச்சர் நெற்றி பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் உடனடியாக முதலுதவி அளித்தனர். இதையடுத்து மீண்டும் தேர்தல் பயண யாத்திரையை தொடர்ந்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் 2லட்சம் ரூபாய் பரிசு வழங்குவதாகவும் போலீசார் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியைச் சார்ந்த பிற்படுத்தப்பட்டோர் அணி செயலாளர் துர்கா ராவ் தூண்டுதலின் பேரில் முதல்வர் மீது கல்வீச்சு நடத்தப்பட்டதாக ஆந்திர மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட 26வயதான இளைஞனை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.