அமெரிக்கா - அயர்லாந்து போட்டி மழையால் ரத்து - சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது அமெரிக்கா!
டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் இடையேயான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் அளிக்கப்பட்டதால் 5 புள்ளிகளுடன் அமெரிக்க அணி அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
9வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நடைபெற இருந்த 30வது லீக் ஆட்டத்தில் அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் மோத இருந்தன. இந்த ஆட்டத்தில் அமெரிக்கா வெற்றி பெற்றால் அந்த அணி நேரடியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுவிடும். மாறாக அமெரிக்கா தோற்றால் பாகிஸ்தானுக்கு அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு நீடித்திருக்கும்.
ஆனால் எதிர்பாராதவிதமாக இந்த போட்டியில் மழை குறுக்கிட்டது. மழை நின்றதும் ஆட்டம் தொடரும் என ரசிகர்கள் மைதானத்தில் காத்திருந்தனர். மழை நின்ற பின், மைதானத்தை தயார்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. அதேசமயம் சிறிது நேரத்தில் மீண்டும் மழை தொடர்ந்தது.
இதன் காரணமாக ஆட்டம் ரத்துசெய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதன் மூலம் 5 புள்ளிகளுடன் அமெரிக்க அணி அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. மழையால் ஆட்டம் ரத்துசெய்யப்பட்டதால் பாகிஸ்தான் அணியின் அடுத்த சுற்று கனவு தகர்ந்தது. தற்போது 2 புள்ளிகளுடன் உள்ள பாகிஸ்தான், எஞ்சியுள்ள ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் கூட 4 புள்ளிகளை மட்டுமே எட்ட முடியும். அதனால் முதல் சுற்றோடு பாகிஸ்தான் வெளியேறியுள்ளது.