அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டம் - வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது இந்திய அணி!
டி20 உலகக் கோப்பை போட்டியின் 25-ஆவது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தியது.
ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
இதுவரை 22 லீக் போட்டியில் முடிந்துவிட்ட போதிலும் எந்த அணியும் சூப்பர் 8 சுற்றை இன்னும் உறுதி செய்யாத நிலையில் இந்தியா, அமெரிக்கா அணிகள் நேற்று நியூயார்க்கில் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி அமெரிக்கா முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது.
தொடக்க வீரராக ஸ்டீபன் டைலர் களமிறங்கினார். ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கி விளையாடிய கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் 11 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். அடுத்த களமிறங்கிய ஸ்டீபன் டைலர் 24 பந்துகளில் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதிஷ் குமார் 27 ரன்களில் அவுட்டாகினர். இறுதியில், அமெரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை எடுத்தது.
இந்தியா சார்பில் 4 ஓவர் வீசிய அர்ஷ்தீப் சிங் 9 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 111 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.
இந்த ஆட்டத்தில் முதலில் அமெரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் சேர்க்க, இந்தியா 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 111 ரன்கள் எடுத்து வென்றது.
இந்த ஆட்டத்தில் இந்திய பௌலர்களில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகள் சாய்த்து ஆதிக்கம் செலுத்த, பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே நிதானமாக விளையாடி வெற்றி தேடித் தந்தனர்.
இந்திய அணியில் களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா 3 ரன்களுக்கும் விராட் கோலி 0 ரன்களுக்கும் வெளியேறி ஏமாற்றமளித்தனர். ரிஷப் பந்த் 18 ரன்களுக்கு அவுட் ஆக, சூர்யகுமார் யாதவ் அரை சதம் கடந்த நிலையில் அவுட் ஆனார். ஷிவம் துபே31 ரன்கள் சேர்த்து, ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு வழிநடத்தினார். இதனிடையே, ஓவர்களுக்கு இடையே அமெரிக்கா அணி அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் இந்தியாவுக்கு 5 ரன்கள் வழங்கப்பட்டதால், இந்தியாவின் எளிதாக வெற்றி பெற்றது.