“ஈசிஆர் சம்பவத்தின் முக்கிய குற்றவாளி அதிமுக-வைச் சேர்ந்தவர்” - ஆர்.எஸ் பாரதி பரபரப்பு குற்றச்சாட்டு!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு செயல்படுகிறார். தொடர்ந்து ஒரு பொய்யை பல முறை சொன்னால் அது உண்மை ஆகி விடும் என்று எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறார். அண்ணா பல்கலைக்கழகம் விவகாரம் பெரியதாக ஆக்க நினைத்தார்கள். ஆனால், முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டு பிசுபிசுத்து போனது.
இரண்டு நாட்களுக்கு முன்னால் ஈசிஆர் சாலையில் நடந்த சம்பவத்தை எடப்பாடி பழனிசாமி திமுக உடன் தொடர்புபடுத்துகிறார் . திமுக கொடி போட்டால் லைசன்ஸ்சா என எடப்பாடி கீழ்த்தரமாக பேசுகிறார். அந்த சம்பத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி சந்துரு அதிமுக-வைச் சேர்ந்தவர்.
அதிமுகவினர் செய்கிற ஒவ்வொரு குற்றச்சாட்டையும் அவர் திமுக மீது போடுகிறார். தமிழ்நாட்டில் இதுவரை குற்றம் செய்தவர்கள் அனைவரும் அதிமுக- வைச் சேர்ந்தவர்கள். அண்ணாநகர் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள் அதிமுகவினர் தான். நான் சொல்வது தவறாக இருந்தால் எடப்பாடி பழனிசாமி என்மீது வழக்கு தொடரலாம்.
திமுக ஆட்சிக்கு மக்கள் மத்தியில் பெரிய செல்வாக்கு உள்ளது. திமுகவினர் என சொல்லிக்கொண்டு அதிமுகவினரே செய்கின்றனர் என சந்தேகம் எனக்கு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட கார் விவரங்களை காவல்துறை டிசி இன்று விளக்கம் கொடுத்திருக்கிறார். புலன் விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் என காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன். இந்த விவகாரத்தில் திமுக கொடி கட்டி திட்டமிட்டு நடக்கிறது. திமுக ஆட்சியை ஒன்றும் செய்யமுடியவில்லை.
பாராளுமன்ற தேர்தலில் எட்டு முறை மோடி தமிழ்நாட்டிற்கு வந்தும் 40தொகுதிகளையும் திமுக தான் வென்றது. சென்னை மாநகரம் இப்போது தான் நிம்மதியாக உள்ளது. திமுக ஆட்சியில் சென்னை தூங்கா நகரமாக உள்ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒரு திட்டம் கூட வரவில்லை. இது குறித்து எடப்பாடி பழனிசாமி பேசவில்லை.
தமிழ்நாடு மக்களுக்கு உரிய மரியாதை மத்திய அரசால் வழங்கப்படவில்லை. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் காவல்துறையினர் முதலில் அண்ணாமலையை பிடித்து உள்ளே போட வேண்டும். உண்மையில் அண்ணாமலை போலீஸ் ஆபிசராக இருந்திருந்தால் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அவரிடம் துப்பு இருந்தால் அதை காவல்துறையிடம் கொடுத்திருக்க வேண்டும்”
இவ்வாறு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்தார்.