"தேவர் திருமகனாருக்கு, பாரதரத்னா வழங்க வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாகப் போற்றி வணங்கி, தேச விடுதலைக்காக பெரும் படையைத் திரட்டிய தென்னாட்டுச் சிங்கம்,
வீரம், விவேகம், உண்மை, உறுதி ஆகியவற்றைத் தன் கொள்கையாகக் கொண்டு பொதுவாழ்வில் மிளிர்ந்த அரசியல் பேராளுமை,
ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற
தனது வாழ்நாளை அர்ப்பணித்த
“தெய்வத் திருமகனார், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி மற்றும் குருபூஜை நாளான இன்று, அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
தேவர்ஜெயந்தி மற்றும் குருபூஜை பெருநிகழ்வினை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர்கள் மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு,
பசும்பொன் புண்ணிய பூமியில் உள்ள தெய்வத் திருமகனார் திருக்கோயிலில், அதிமுக சார்பில்
அம்மா அவர்களால் வழங்கப்பட்ட தங்கக் கவசத்தால் தரிக்கப்பட்டுள்ள அவர்தம் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வணங்கினேன்.
அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராகவும், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் போராடிய தேவர் திருமகனாருக்கு, இந்திய நாட்டின் உயரிய விருதான பாரதரத்னா வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் அதிமுக கோரிக்கை விடுத்துள்ளதை நினைவுகூர்கிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
  
  
  
  
  
 