பிடிபடாமல் சுற்றித்திரியும் ஓநாய் கூட்டத் தலைவன் | பீதியில் #UP கிராம மக்கள்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்னும் பிடிபடாமல் இருக்கும் ஓநாயால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
உலகில் உள்ள குழந்தைகளுக்கு ஓநாய்கள் பற்றிய அறிமுகம் 'ஜங்கிள் புக்' படத்திலிருந்து கிடைத்தது. அதில் ஒரு ஓநாய் கூட்டம் கைவிடப்பட்ட ஒரு மனிதக் குழந்தையைக் காட்டில் வளர்க்கின்றன. மிகவும் பாசமாகவும் பாதுகாப்பாகவும் அந்த குழந்தையை வளர்க்கும் காட்சிகள் காலத்தால் அழிக்கமுடியாத காட்சிகளாகவே அமைந்திருக்கும். ஆனால் உத்தரப்பிரதேசம் பஹ்ரைச்சில், சிங்கத்தை விட ஓநாய் பயம் அதிகம் அதிகமாக உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக ஓநாய்கள் தாக்குதல் அதிகரித்துள்ளதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். பஹ்ரைச் நகரை சுற்றியுள்ள 35-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிகளவில் ஓநாய்கள் நடமாடுவதாகக் கூறப்படுகிறது. இந்த மாவட்டத்தில் கடந்த 45 நாட்களில் 9 குழந்தைகள், ஒரு பெண் உள்பட 10 பேர் ஓநாய் கடித்து உயிரிழந்து விட்டனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து பொதுமக்களைக் கொன்று வரும் ஓநாய்களைக் கண்டதும் சுட முதல்வர் உத்தரவிட்டிருந்தார். மேலும் ஆட்கொல்லி ஓநாய்களைப் பிடிக்க ஆபரேஷன் பேடியா என்ற தேடுதல் வேட்டை ஏற்படுத்தப்பட்டு, ட்ரோன்கள் மூலம் ஓநாய்களின் நடமாட்டம் கண்டறிந்து அவற்றை பிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆபரேஷன் பேடியா தேடுதல் வேட்டையில் ஏற்கனவே 4 ஓநாய்கள் பிடிக்கப்பட்டன. இந்நிலையில் மேலும் ஓரு ஓநாய் நேற்று பிடிபட்டது.
ஆனால், ஒன்று முதல் இரண்டு ஓநாய்கள் இன்னும் சுதந்திரமாக சுற்றித் திரிவதாகவும், அவையும் விரைவில் பிடிபடும் என்றும் கூறப்படுகிறது. இந்த குழுவின் தலைவரான ஆல்பா ஓநாய் இன்னும் சுதந்திரமாக சுற்றித் திரிந்து மக்களை குறிவைத்து வருகிறது. ஆல்பா ஓநாயின் கூட்டம் பிடிபட்ட பிறகு, இந்த ஓநாய் மிகவும் ஆபத்தானதாகச் செயல்பட்டு வருகிறது. இந்த ஆல்பா ஓநாய் கடந்த 24 மணி நேரத்தில் நான்கு பேரைத் தாக்கியுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு வெவ்வேறு கிராமங்களில் சிறுமிகளைத் தாக்கிய பின்னர், புதன்கிழமை இரவு ஓநாய்கள் ஒரு வயதான பெண்ணைத் தாக்கி காயப்படுத்தியது. ஓநாய் தாக்கியபோது மூதாட்டி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்த தாக்குதலில் பெண்ணின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
அந்த பெண் அலறியதும் மருமகள் வந்து ஓநாயை பார்த்து சத்தம் போட்டார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் வந்தபோது ஓநாய் தப்பி ஓடியது. காயமடைந்த பெண் மஹ்சி சுகாதார மையத்திற்கு கொண்டு வரப்பட்டார், அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பஹ்ரைச் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டது. ஓநாய் அந்த பெண்ணின் கழுத்தை தற்போது பேச முடியாத வகையில் தாக்கியுள்ளது. இந்த தாக்குதலையடுத்து அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சமான சூழல் நிலவுகிறது.