இன்று வெளியாகும் தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியல்?
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் கடந்தாண்டு பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். தொடர்ந்து கொடி அறிமுகம், கட்சியின் பாடல் அறிமுகம், முதல் மாநாடு ஆகியவை நடைப்பெற்றது. ஆனால் கட்சிக்கு மாவட்ட வாரியாக பல நிர்வாகிகள் இன்னும் நியமிக்கப்படவில்லை.
சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து நிர்வாகிகள் நியமனம் தொடர்பான வேலைகள் தவெகவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்சியில் பதவி வகிக்க வேண்டுமானால் ரூ.15 லட்சம் பணம் தர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டதாக தகவல்கள் பரவியது. மேலும் இதற்காக வாட்ஸ்அப் குழு ஒன்று அமைக்கப்பட்டதாகவும், அதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்தும் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்டது.
இந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பதவிக்கு பணம் வாங்கினாலோ அல்லது பணம் கொடுத்தாலோ, அது யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்பதாகவும், பொறுப்புகள் குறித்து முக்கிய முடிவுகள் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இன்று நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.
விருகம்பாக்கம்- அண்ணா, தி.நகர் - அப்புனு, அம்பத்தூர் - பாலமுருகன், பூக்கடை - குமார், இசிஆர் - சரவணன் , திருவொற்றியூர் - நவீன், மதுரை - விஜய் அன்பன், நெல்லை - சாஜி உள்ளிட்டோரின் பெயர்கள் முதற்கட்டமாக அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.