குரூப் 4ல் தேர்வான நபர்களின் பட்டியலை ஜனவரி 8ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் -உயர்நீதிமன்றம் உத்தரவு!
குரூப் 4ல் தேர்வான நபர்களின் பட்டியலை ஜனவரி 8ம் தேதிக்குள் வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது. அந்த வகையில் இரண்டாம் நிலையில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு, கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 9 லட்சம் தேர்வர்கள் தேர்வை எழுதினர். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது.
இதற்கான தேர்வு முடிவுகள் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டன. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது.
ஆனால், இந்த முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. தேர்வாணையம் குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று அறிவித்து இருந்தது. இருப்பினும் இது நீண்ட காலம் என்றும், ஏற்கனவே தேர்வு அறிவிப்பிலிருந்து தற்போது வரை ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும் தேர்வர்கள் கூறின. மேலும் நேர்காணல், சான்றிதழ் சரிப்பார்ப்பு, கலந்தாய்வு எல்லாம் முடித்து பணியில் சேர இன்னும் கால தாமதம் ஆகும் என்றும் வேதனை தெரிவித்தனர்.
இந்தநிலையில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ”குரூப் 2 முதன்மைத் தேர்வு மதிப்பீட்டுப் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. 80 சதவீதத்துக்கு மேல் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. வரும் டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு சுமார் 6000 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகள் முதலமைச்சரால் வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.
இதனால், தேர்வர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். டிசம்பர் முதல் வாரம் முடிவடைந்த நிலையில், தேர்வு முடிவுகள் இன்று வரை (டிசம்பர் - 9) வெளியாகவில்லை.
இதுதொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கேட்டப்போது, ”இன்னும் ஒரு வாரத்திற்குள் விடைத்தாள் திருத்தம் முடிந்துவிடும் என எதிர்பார்க்கிறேன். முடிந்தவுடனே முடிவுகள் வெளியிடப்பட்டு விடும்” என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், குரூப் 4ல் தேர்வான நபர்களின் பட்டியலை ஜனவரி 8ம் தேதிக்குள் வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குரூப் 4 தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் குழப்பம் இருப்பதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.