”#SenthilBalaji-க்கு ஜாமின்: PMLA ஒரு கொடுங்கோன்மை சட்டம் | நியூஸ் 7 தமிழ் நேரலையில் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருத்து!
செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், PMLA சட்டம் ஒரு கொடுங்கோன்மை சட்டம் என்பது நிரூபணமாகியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையில் தமிழ்நாடு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி கைது செய்யப்பட்டார். இவரது ஜாமீன் மனு தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இதுவரை 58 முறை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு அளிக்கப்பட்ட நிலையில், அடிப்படை உரிமை கருதி ஜாமீன் வழங்கப்படுள்ளது. மேலும், மீண்டும் தமிழ்நாட்டின் அமைச்சராக செந்தில் பாலாஜிக்கு எவ்வித தடையும் கட்டுப்பாடும் உச்சநீதிமன்றம் விதிக்கவில்லை.
இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது குறித்து நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் நேரலையில் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறியதாவது:
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கும் என்பது முன்பே தெரிந்தது தான். செந்தில் பாலாஜி வழக்கு 10 ஆண்டுகள் பழைய வழக்கு. இந்த வழக்கைச் சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் கொண்டு வந்தனர். இந்தியாவில், இது போன்று கவிதா முதல் செந்தில் பாலாஜி வரை அவர்கள் வழக்கை எதாவது ஒரு வகையில் சட்டத்தையும் அரசியலையும் சேர்த்துப் பார்க்கின்றனர். இது போன்று மும்பையில் கூட்டணியை உடைப்பதற்கு PMLA பயன்படுத்தப்பட்டது. இப்படிச் செய்வதன் மூலம் இது போன்ற சட்டங்கள் கருப்பு சட்டங்களாக மாறுகிறது. ஒரு கொடுங்கோன்மை சட்டமாக மாறுகிறது. அடக்குமுறை சட்டமாக மாறுகிறது.
இதில் இரண்டு மிக முக்கியமான விஷயங்கள், 1. துரித விசாரணைக்கான தனிமனித உரிமை, 2. தனிமனித சுதந்திரம், இவை இரண்டும் இதில் மீறப்படுகிறது. காரணம் இது போன்ற வழக்குகள் எப்போது முடியும் என்று யாருக்கும் தெரியாது, கடவுளுக்கே தெரியாது. எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் ஆகலாம்.
குறிப்பாக உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறையைப் பார்த்து நீங்கள் ஒருவரைச் சிறையில் வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே நீங்கள் வழக்கை எடுக்கிறீர்கள். அமலாக்கத் துறை போன்ற அமைப்பை அரசியல் காரணங்களுக்காகச் சிதைப்பதாகத் தான் இந்த வழக்கின் மூலம் நாம் தெரிந்துகொள்கிறோம்.
செந்தில் பாலாஜி அமைச்சராவதில் தடையில்லை. ஏனெனில் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவி தகுதி இழப்பு நடந்தால் தான் அவரால் அமைச்சராவதில் சிக்கல் ஏற்படும். இதில் அவர் சட்டமன்ற உறுப்பினராகத் தொடர எந்த தடையும் இல்லை. இது ஆளுநரைப் பொருத்தத்து. ஆளுநர் அடுத்தகட்ட போரை ராஜ்பவனில் தொடர வாய்ப்புள்ளது.
அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் கூறினார். செந்தில் பாலாஜி ஜாமின் எதிர்பார்த்த திசையில் தான் சென்றது. இது முன்பே தெரிந்ததுதான். பொன்முடி அமைச்சராவதற்கு ஆளுநர் என்னென்ன முட்டுக்கட்டைகள் போட்டார் என்பது நாம் அறிந்தது தான். அதேபோல் செந்தில் பாலாஜி அமைச்சராவதில் தாமதம் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதைப் பொருத்து உதயநிதி துணை முதலமைச்சர் ஆவதை தாமதப்படுத்துவார்களா என்பது தெரியாது. அக்டோபர் முதல் வராம் அவர் துணை முதலமைச்சர் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இவற்றைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.