"சீனா அபகரித்துள்ள நிலம் ஒரு சிறிய தீவை விட 1000 மடங்கு பெரியது" - கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் பதில்!
"சீனா அபகரித்துள்ள நிலம் ஒரு சிறிய தீவை விட 1000 மடங்கு பெரியது" என கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் பதில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியின்போது, ஒப்பந்தம் போடப்பட்டு இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், கச்சத்தீவு பற்றி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெற்ற தகவலை குறிப்பிட்டு பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அப்பதிவு அரசியல் வட்டாரத்தில் கச்சத்தீவு குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது
பிரதமர் மோடியின் பதிவில் “ கச்சத்தீவை காங்கிரஸ் கட்சி எப்படி விட்டுக்கொடுத்தது என்பது பற்றிய புதிய உண்மைகள் வெளிப்பட்டு உள்ளன. இந்த விசயம் ஒவ்வோர் இந்தியனையும் ஆத்திரப்படுத்தி உள்ளது. காங்கிரசை நாம் ஒருபோதும் நம்ப முடியாது என்று மக்களின் மனங்களில் பதியும் வகையில் இந்த விசயம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
அதோடு, இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்தும் வகையில், 75 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பணியாற்றும் விதம் தொடர்ந்து வருகிறது என அவர் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..
” 1974ஆம் ஆண்டில் இரு நாடுகளிடயே நடந்த பரிமாற்றத்தைத் பிரதமர் மோடி இப்பொழுது ஏன் கிளப்புகிறார்? கச்சத்தீவின் பரப்பளவு 1.9 சதுர கி.மீ. தான். அதனைத் தந்து 6 லட்சம் இலங்கைத் தமிழர்களை மீட்டு அவர்களுக்குச் சுதந்திரமும் புது வாழ்வும் தந்தவர் இந்திரா காந்தி.
https://x.com/PChidambaram_IN/status/1774631067443507586?s=20
பிரதமர் மோடி செய்தது என்ன? 2000 சதுர கி.மீ இந்திய பூமியைச் சீனா அபகரித்திருக்கிறது. ”எந்தச் சீனத் துருப்புகளும் இந்திய மண்ணில் இல்லை" என்று சொல்லி சீனாவின் ஆக்கிரமிப்பைத் நரேந்திர மோடி நியாயப்படுத்தினார். மோடியின் பேச்சை சீனா உலகமெங்கும் பரப்பியது. சீனா அபகரித்துள்ள நிலம் ஒரு சிறிய தீவை விட 1000 மடங்கு பெரியது. நல்லுணர்வுடன் பரிமாற்றம் செய்துகொள்வது வேறு, காழ்ப்புணர்வுடன் அபகரிப்பது வேறு “ என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.