For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் களைகட்டிய கும்பாபிஷேக விழா!

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
10:47 AM Apr 04, 2025 IST | Web Editor
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் களைகட்டிய கும்பாபிஷேக விழா
Advertisement

கோவை மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த மாதம் 30 ஆம் தேதி மாலை 6 மணிக்கு மங்கள இசை திருமறை, திருமுறை பாராயணம், விநாயகர் பூஜை, இறை அனுமதி பெறுதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

Advertisement

தொடர்ந்து தினமும் காலை முதல் கால வேள்வி, இரண்டாம் கால வேள்வி, மூன்றாம் கால வேள்வி நடைபெற்றது. இதனை அடுத்து கும்ப அலங்காரம், இறை சக்தியை திருக்குடங்களுக்கு எழுந்தருள செய்தல், மூலவரிடம் இருந்து யாகசாலைக்கு திருக்குடங்களை எழுந்தருள செய்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும் நான்காம் கால வேள்வி, ஐந்தாம் கால வேள்வி, இறைவனின் அருட்கலைகளை நாடியின் வழியே எழுந்தருள செய்தல், பேரொளி வழிபாடு நடைபெற்றது. இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. அதன்படி அதிகாலை 4:30 மணிக்கு மங்கள இசை, திருமறை, திருமுறை பாராயணம், ஆறாம் கால வேள்வி நடைபெற்றது.

இதையடுத்து காலை 6 மணி முதல் 6:45 மணிக்குள் திருச்சுற்று தெய்வங்களுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 7:30 மணிக்கு யாக சாலையில் இருந்து திருக்குடங்கள் ஏந்தி கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து காலை 8:30 மணிக்கு மருதாச்சல மூர்த்தி விமானம், ஆதி மூலவர் விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பரிவார விமானங்கள் அனைத்துக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

காலை 9 மணிக்கு ஆதி மூலவர், விநாயகர், மருதாச்சல மூர்த்தி, பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, வீரபாகு, கரிவரதராஜ பெருமாள், சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாலை 4:30 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகமும், மாலை 5:30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, வள்ளி - தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதையடுத்து சுவாமி வள்ளி-தெய்வானையுடன் வீதி உலா வருகிறார்.

விழாவில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் உட்பட பல்வேறு ஆதீனங்கள் கலந்து கொண்டனர். மேலும் மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை ஒட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. செந்தில் பாலாஜி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

Tags :
Advertisement