தூர்தர்ஷனில் 'தி கேரளா ஸ்டோரி': கடும் எதிர்ப்பு தெரிவித்த அரசியல் கட்சிகள்!
நாட்டை வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்தும் விஷம செயல்திட்டத்தின் ஒரு பகுதி தான் தூர்தர்ஷன் டிவி சேனலில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தை ஒளிபரப்புவது என கேரள எதிர்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன் தெரிவித்துள்ளார்.
சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்த ‘தி கேரளா ஸ்டோரி’ கடந்த ஆண்டு வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளானது. தென் மாநிலத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் “சுமார் 32,000 பெண்களின்” பின்னணியில் உள்ள நிகழ்வுகளை “கண்டுபிடிப்பதாக” இப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் இன்று (ஏப்ரல் 5) தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பிளவுபடுத்தும் கருத்துகளை கொண்ட 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை ஒளிபரப்ப 'டிடி நேஷனல்' எடுத்த முடிவு மிகவும் கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி, பாஜக - ஆர்எஸ்எஸ் கூட்டணியின் பிரச்சார இயந்திரமாக மாறக்கூடாது. பொதுத் தேர்தலுக்கு முன்பு வகுப்புவாத பதற்றங்களை அதிகரிக்க முற்படும் ஒரு திரைப்படத்தைத் திரையிடுவதை திரும்பப் பெற வேண்டும். வெறுப்பை விதைக்கும் இத்தகைய தீங்கிழைக்கும் முயற்சிகளை எதிர்ப்பதில் கேரளா உறுதியாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், கேரள எதிர்க்கட்சித் தலைவரான வி.டி.சதீஷன், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ 'தி கேரளா ஸ்டோரி' மிகவும் தவறான பின்னணியை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிரச்சாரத் திரைப்படம். இது நாட்டை வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்தும் விஷம செயல்திட்டத்தின் ஒரு பகுதி.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, இந்த திரைப்படத்தை ஒளிபரப்ப மத்திய அரசு எடுத்த முடிவு, ஆளும் பாஜகவின் தேர்தல் பரப்புரைகளை மேம்படுத்த, சமூகத்தை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் ஒரு மறைமுக முயற்சியாகும். எனவே தீங்கிழைக்கும் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை ஒளிபரப்பும் முடிவில் இருந்து விலகிக்கொள்ள, தூர்தர்ஷனுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.