கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு!
'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் 'கத்திரி வெயில் காலம் தமிழ்நாட்டில் இந்தாண்டு கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இந்த வெயில் மே.28 வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. எப்போதும் அக்னி நட்சத்திரம் என்றாலே கடும் வெயில் வாட்டி வதைக்கும் என மக்கள் அஞ்சுவார்கள்.
ஆனால் இந்த முறை வெப்ப அலை தமிழ்நாட்டில் இருக்காது. வெப்பத்தின் தாக்கமும் வழக்கத்தைவிட குறைந்தே காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கேற்றாற்போல், முதல் வாரத்தில் வெப்பம் இயல்பைவிட அதிகரித்து காணப்பட்டாலும், அதனைத்தொடர்ந்து வெயிலின் தாக்கம் சற்று குறைந்தே காணப்பட்டது.
இதற்கிடையில் தென் மேற்கு பருவமழையும் முன்கூட்டியே தொடங்கியதால், தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் பல பகுதிகளில் கனமழையும் பதிவாகி வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக வெப்பம் தணிந்தே காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி தொடங்கிய கத்திரி வெயில் இன்றுடன் நிறைவடைகிறது.