நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜேடியூ-பாஜக கூட்டணி அரசு வெற்றி!
பீகார் சட்டப் பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜேடியூ-பாஜக கூட்டணி அரசு 129 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றது.
பீகார் மாநிலத்தில் கடந்த 2020ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பாஜக- நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சி வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராக இருந்த நிதிஷ்குமார் திடீரென பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார்.
இதனையடுத்து நிதிஷ்குமாரின் ஜேடியூ-காங்கிரஸ்- ஆர்ஜேடி-இடதுசாரிகள் இணைந்து புதிய கூட்டணி ஆட்சி அமைந்தது. இந்த கூட்டணியில் இருந்தும் அண்மையில் நிதிஷ்குமார் விலகி மீண்டும் பாஜக அணியில் இணைந்தார்.
இதனையடுத்து கடந்த 4 ஆண்டுகளில் 2 முறை பதவியை ராஜினாமா செய்துவிட்டு 3-வது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார் நிதிஷ்குமார்.
இதனைத் தொடர்ந்து நிதிஷ்குமார் அரசு மீது இன்று பீகார் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. 243 எம்.எல்.ஏக்களை கொண்ட சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 128 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தனக்கு உள்ளதாக நிதிஷ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் 129 எம்எல்ஏக்கள் நிதீஷ்குமார் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.