கால் வக்கிர இடமெல்லாம் கண்ணிவெடியா... மாயமான கஞ்சா - எலிகள் மீது பழி போட்ட ஜார்க்கண்ட் காவல்துறை!
பல்வேறு குற்றச் சம்பவங்களில் பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 19 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுவிட்டதாக நீதிமன்றத்தில் ஜார்க்கண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி அன்று, 10 கிலோ பாங்கு மற்றும் 9 கிலோ கஞ்சாவுடன் இருந்த ஷம்பு பிரசாத் அகர்வால் மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்தனர். பின்னர் ராஜ்கஞ்ச் காவல் நிலையத்தில் இவர்கள் மீது எஃப்ஐஆர் போடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ஏப்ரல் 6 ஆம் தேதிக்குள் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் போதைப்பொருட்களை நீதிமன்றத்தில் காவல்துறை ஒப்படைக்கவில்லை. போதைப்பொருட்கள் ஒப்படைக்க படாததையடுத்து, தனது கட்சிக்காரர் மீது போலி வழக்கு போடப்பட்டதாக குற்றாவாளி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதமிட்டார். இதனைத் தொடர்ந்து பல வருடங்களாக காவல்நிலை கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 19 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதிகள், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ( ஆதாரம்) இல்லையென்றால், இது குற்றாவாளிகளுக்கு சாதகமாகி விடாதா? என கேள்வி எழுப்பினர். இதனையடுத்து கிடங்கு பொறுப்பாளர்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.