For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பொங்கலுக்கு பின் திறப்பு விழா காணும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கு!

02:10 PM Jan 08, 2024 IST | Web Editor
பொங்கலுக்கு பின் திறப்பு விழா காணும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கு
Advertisement

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு விழா எப்போது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Advertisement

பண்டைய ஏறுதழுவுதல் பண்பாட்டின் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு,  தமிழர்களின் தனிச்சிறப்பு மிக்க மரபு அடையாளமாகத் திகழ்கிறது. விலங்கு வதை என்ற அடிப்படையில் இவ்விளையாட்டுக்குத் தடை ஏற்பட்டபோது,  கடந்த 2016-ஆம் ஆண்டு,  தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற தன்னெழுச்சியான போராட்டத்திற்குப் பிறகு நிரந்தர தீர்வு கிடைத்தது.

இந்நிலையில்,  அலங்காநல்லூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில்,  ரூ. 64 கோடி செலவில்,  77,683 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த அரங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து விளையாட்டை ரசிக்கும் வண்ணம் அரை வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

வருகின்ற தைப்பொங்கலை ஒட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகின.  மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இந்த அரங்கத்தில் செய்யப்பட்டுள்ளன.  இங்கு நடைபெறும் போட்டிகளைக் காண வருகை தரும் மக்கள் எளிதில் வந்து செல்ல வசதியாக நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2024ம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிக்காக முகூர்த்தக்கால் நடும் விழா இன்று காலை நடைபெற்றது.  இதில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார்.  பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மதுரையில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கம் வரும் ஜனவரி 23 அல்லது 24ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என தெரிவித்தார்.

Advertisement