இந்தியாவை அதிர வைத்த ஐடி ரெய்டு...50 வங்கி ஊழியர்கள், 40 இயந்திரங்கள் உதவியுடன் எண்ணப்பட்ட ரூ. 340 கோடி!
காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹுவுக்கு சொந்தமான இடங்களில் இருந்து இதுவரை ரூ.340 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகவும், 50 வங்கி ஊழியர்களும், 40 பணம் எண்ணும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேற்கு ஓடிஸாவின் பிரபல மதுபான தயாரிப்பு நிறுவனமான பல்தேவ் சாஹு குழுமத்தின் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள், நிறுவனத்துடன் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. ஒடிஸா தலைநகர் புவனேசுவரம், சம்பல்பூர், ரூர்கேலா, சுந்தர்கர் மற்றும் போலங்கிரில் நடைபெற்று வரும் சோதனை 5-வது நாளான ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை வரை நடைபெற்ற சோதனையில், வருமான வரித்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.225 கோடி பணம் போலங்கிரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டு எண்ணப்பட்டது. அதே மாவட்டத்தில் உள்ள சுதாபாரா பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற சோதனையில், கூடுதலாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட மொத்த பணமும், நாட்டு மதுபானத்தை விற்று குழுமம், விநியோகிஸ்தர்கள் மற்றும் பிறர் சம்பாதித்த கணக்கில் வராத கருப்புப் பணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், எஸ்பிஐ உள்ளிட்ட மூன்று பொதுத் துறை வங்கிகளின் ஊழியர்கள் இப்பணிக்கு அமர்த்தப்பட்டனர். சனி மற்றும் ஞாயிறு வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், அவர்கள் சோதனை நடைபெறும் இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். பணத்தை எண்ணும் பணி மணிக்கணக்கில் நடந்ததாகவும், சில பணம் எண்ணும் இயந்திரங்கள், பணத்தை எண்ணிக்கொண்டிருக்கும்போதே உடைந்துபோனதாகவும் கூறியுள்ளனர்.