ஹமாஸ் தலைவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் : ஈரான் அதிகாரிகள் மீது சந்தேகம்!
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா கொலை செய்யப்பட்டதில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (ஐஆர்ஜிசி) அதிகாரிகள் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். அப்போது முதல் இஸ்ரேல் உளவுப் படையான மொசாட், ஹமாஸ் முக்கியபுள்ளிகளை குறிவைத்து தாக்கி வருகிறது. இந்த வரிசையில் ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஜூலை 31-ல் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நாள்தோறும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுகுறித்து அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: ஈரான் ராணுவத்தின் உயர் பிரிவான இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (ஐஆர்ஜிசி) கட்டுப்பாட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஹனியா தங்கினார். அவர் தங்கியிருந்த அறையில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இதில் ஹனியா உயிரிழந்தார். இதன் பின்னணியில் இஸ்ரேல் உளவுப் படையான மொசாத் இருக்கிறது. மொசாத்தின் ஏஜெண்டுகளாக செயல்பட்ட ஈரானின் ஐஆர்ஜிசி படையின் அதிகாரிகள், வீரர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : “வயநாடு பேரழிவுக்கு பசுக்களை கொன்றதே காரணம்“ - பாஜக மூத்த தலைவர் பேச்சால் சர்ச்சை!
பிரிட்டனின் டெலிகிராப் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், “இஸ்மாயில் ஹனியா அடிக்கடி தங்கும் டெஹ்ரானில் உள்ள விருந்தினர் மாளிகையின் 3 அறைகளில் முன்கூட்டியே வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டன. இந்த வெடிகுண்டுகளை ஈரானின் ஐஆர்ஜிசி படையை சேர்ந்த 2 அதிகாரிகள் மறைத்து வைத்தனர். இவர்கள் மொசாட்டின் ஏஜெண்டுகள் ஆவர். குறிப்பிட்ட அறையில் ஹனியா தங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டதும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிகுண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டன” என தெரிவித்துள்ளது.
இஸ்மாயில் ஹனியா கொலையில் ஐஆர்ஜிசி படையினருக்கு தொடர்பு இருப்பது குறித்து ஈரான் அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் ஐஆர்ஜிசி படையை சேர்ந்த அதிகாரிகள், வீரர்கள் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. ஈரான் ராணுவம் உட்பட அனைத்து துறைகளிலும் இஸ்ரேலின் மொசாத் ஏஜெண்டுகள் ஊடுருவி இருப்பதாகக் கூறப்படுகிறது.