கழிவுநீர் கலந்த தண்ணீர் குடித்து சிறுவன் உயிரிழந்த விவகாரம்: மாதிரி நீரை ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
கழிவு நீர் கலந்த தண்ணீரை குடித்து சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் மாதிரி நீர்
ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரூ.14.56 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
“ராஜீவ் காந்தி மருத்துவமனையில் புதிய மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மூளை ரத்தக் குழாய்களில் ஏற்படும் ரத்தம் உறைதலால் ஏற்படும் திடீர் பக்கவாதங்களை கண்டறிவதற்கும், ரத்தக் குழாய்களில் ஏற்படும் உறைவை அகற்றுவதற்கான சிகிச்சையை வழங்கும் ஆய்வகம் ஆகியவை ரூ.10 கோடியே 92 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு நம் மாநில அரசு மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள் தொடர்ந்து பயன்பாட்டுக்கு வந்துகொண்டிருக்கிறது.
அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் சைதாப்பேட்டையில் கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்து சிறுவன் உயிர் இழந்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,
“ பீகாரைச் சேர்ந்த சிறுவன் 10 நாட்களுக்கு முன்பாக தான் சைதாப்பேட்டையில் குடியேறியதாக சொன்னார்கள். நான் சட்டப்பேரவையில் இருந்ததால் எனக்கு தெரியாது. வெளியே வந்த பிறகுதான் தகவலை சொன்னார்கள். அதிகாரிகள் ஆய்வுக்கு சென்ற பொழுது வீட்டில் பழைய சாதம் இருந்துள்ளது. அந்தப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக மெட்ரோ நிர்வாகம் தண்ணீர் மாசு தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார்கள். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியும் அங்கே சென்று ஆய்வு செய்துள்ளார்.
குழந்தை எதனால் இறந்தது என்பதை கண்டுபிடிக்க தண்ணீரின் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு சென்னை மாநகராட்சி ஆணையர் சென்று ஆய்வு செய்துள்ளார். நானும் இன்று மாலை 6 மணிக்கு சென்று ஆய்வு செய்ய இருக்கிறேன். கடந்த ஒரு வாரமாக மெட்ரோ நிர்வாகம் குழாய்களில் எங்கே ஓட்டை விழுந்துள்ளது என்பது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார்கள்” என தெரிவித்தார்.
“உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுப்போம். சில நோய்களுக்கு அண்டை மாநிலத்தவராக இருந்தால் அரசு மருத்துவமனைகளிலும் பணம் கட்டிதான் சிகிச்சை பெற வேண்டும். அதற்காக பணம் கேட்டிருக்கலாம். ஆனால் இது தொடர்பாக விசாரணை செய்யப்படும். நீட் விலக்கு வேண்டும் என்று முதலில் கேட்டது திமுகதான். தற்பொழுது இந்தியா முழுக்க கேட்கிறார்கள். இந்த நிலையை வரவைத்தது திமுகதான். தற்பொழுது நீட்டில் குளறுபடிகள் நடந்ததும் தெரிய வந்துள்ளது” என தெரிவித்தார்.