For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்த விவகாரம் - குடியரசுத் தலைவருக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனு!

10:13 AM Mar 24, 2024 IST | Web Editor
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்த விவகாரம்   குடியரசுத் தலைவருக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனு
Advertisement

சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்த விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

Advertisement

கேரள அரசின் சார்பாக இயற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்துள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவித்துள்ளதாவது..

“ கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த மசோதா 2021, கேரள கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா 2022, பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த மசோதா 2022 மற்றும் பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த (எண் 3) மசோதா 2022 ஆகிய 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமலும், எந்தவித காரணத்தைத் தெரிவிக்காமலும் குடியரசுத் தலைவர் நிறுத்திவைத்துள்ளார். இதை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்.

மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்படும் பல மசோதாக்களை ஆளுநர் ஆரிஃப் முகமது கான், ஒப்புதல் அளிக்காமல் கால வரையின்றி நிறுத்திவைக்கிறார். அதன் பின்னர், அந்த மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புகிறார். இது ஆளுநரின் தன்னிச்சையான நடவடிக்கை என்பதோடு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசமைப்புச் சட்டப் பிரிவு 14-ஐ மீறும் செயலாகும். இந்த 4 மசோதாக்களும் முழுவதும் மாநில அரசின் அதிகார வரம்புக்குள் வருகின்ற சட்ட நடைமுறைகளாகும்.

மத்திய அரசின் அறிவுரைப்படி இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவர் நிறுத்தி வைத்திருப்பது தன்னிச்சையானது மற்றும் சட்டப் பிரிவு 14-ஐ மீறும்
செயலாகும். மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மக்கள் நல சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பது, அரசமைப்பு சட்டப் பிரிவு 21-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள மாநில மக்களின் உரிமைகளை மறுக்கும் செயலாகும்.

எனவே, இந்த 4 மசோதாக்களை குடியரசுத் தலைவர் நிறுத்திவைத்திருப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும், இந்த 4 மசோதாக்கள் உள்பட மாநில அரசு சார்பில்
அனுப்பிவைக்கப்பட்ட 7 மசோதாக்களை ஆளுநர் காலவரையின்றி கிடப்பில் போட்டுவைத்திருப்பது சட்ட விரோதம் எனவும் அறிவிக்க வேண்டும். இந்த வழக்கில் மத்திய அரசு, குடியரசுத் தலைவரின் செயலர், மாநில ஆளுநர், ஆளுரின் கூடுதல் செயலர் ஆகியோரை வாதிகளாக சேர்க்க வேண்டும் என்று தனது மனுவில் கேரள அரசு குறிப்பிட்டுள்ளது.

ஏற்கெனவே, மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்துள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு கடந்த ஆண்டு நவம்பரில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பஞ்சாப் ஆளுநருக்கு எதிரான அந்த மாநில அரசின் வழக்கில் அளித்த தீர்ப்பை கேரள ஆளுநருக்கு தெரியப்படுத்துமாறு அவரின் கூடுதல் செயலருக்கு அறிவுறுத்தியது.

பஞ்சாப் ஆளுநருக்கு எதிரான வழக்கில், 'புதிதாக சட்டம் கொண்டுவரும் மாநில அரசின் வழக்கமான நடவடிக்கைகளில் ஆளுநர்கள் தடை ஏற்படுத்த முடியாது' என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.  இந்த உத்தரவைத் தொடர்ந்து, கிடப்பில்
போட்டுவைத்திருந்த 8 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த கேரள ஆளுநர், எஞ்சிய 7 மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பிவைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement