For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: | குற்றவாளி யாராக இருந்தாலும் தப்ப முடியாது - சென்னை காவல் ஆணையர்!

11:26 AM Feb 09, 2024 IST | Web Editor
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்    குற்றவாளி யாராக இருந்தாலும் தப்ப முடியாது   சென்னை காவல் ஆணையர்
Advertisement

சென்னையில் நேற்று ஒரே நாளில் 13 பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில்,  குற்றவாளி யாராக இருந்தாலும் தப்ப முடியாது என சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். 

Advertisement

சென்னையில் நேற்று ஒரே நாளில் 13 பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர்.  இதனைத் தொடர்ந்து மிரட்டல் விடுத்தது வெறும் வதந்தி எனவும்,  மக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள வித்யோதயா பள்ளியில் 'பள்ளி பாதுகாப்பு பகுதி' என்ற புதிய திட்டத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று துவங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கு பெற்றனர்.  'பள்ளி பாதுகாப்பு பகுதி'  திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற தன்னார்வலர்களுக்கு உபகரணங்களை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறியதாவது:

"பள்ளி பாதுகாப்பு பகுதி, என்கிற புதிய திட்டத்தை இன்று தொடங்கியுள்ளோம்.
காலையும் மாலையும் பள்ளிக்கு வெளியே மாணவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த
ஏற்கனவே, போக்குவரத்து காவல்துறை,  பள்ளி மாணவர்களின் சாலை பாதுகாப்பு படை
ஆகியவர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் உதவியுடன்
அவர்களையும் தன்னார்வலர்களாக இணைத்து இந்த திட்டத்தை இன்று 4 பள்ளிகளில்
தொடங்கி உள்ளோம்.

இந்த திட்டத்தில் 400 பேருக்கு பயிற்சி அளித்துள்ளோம்.  பயிற்சி பெற்றவர்கள்
சென்னை முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ள பெற்றோர், ஆசிரியர்களுக்கு
பயிற்சி அளித்து அனைத்து பள்ளிகளிலும் காலை மாலை பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் போக்குவரத்து சீர் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள்.

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் நகரத்திலும் இல்லாத வகையில் சென்னையில்
முதன்முறையாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  சென்னை மாநகரத்தை பொருத்தவரையில் சாலை விபத்துகளில் உயிர் இழப்பவர்கள் கடந்த 2022-ம் ஆண்டு ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டு இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.  எனவே இதேபோன்று புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி மேலும் இந்த
எண்ணிக்கையை குறைப்பதற்கும்,  மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் திட்டம் உதவியாக இருக்கும்.

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து
முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது.  மிரட்டல் தொடர்பாக தேவையில்லாத
பதற்றமடைய வேண்டாம்.  இன்று கூட பள்ளியில் வளாகத்தில் தான் நிகழ்ச்சிகளை நடத்தி
வருகிறோம்.  எனவே அது முற்றிலும் தவறான தகவல் வதந்தி.  அதில் ஈடுபட்டவர்கள்
யாராக இருந்தாலும் விரைவில் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

வழக்கு விசாரணை தொடர்பாக விரிவான தகவல்களை பொது வெளியில் அறிவிக்க முடியாது.  வழக்கமாக இது போன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் பழைய குற்றவாளிகளின் தகவல்களை சேகரித்து அவர்கள் யாரேனும் இதில் ஈடுபட்டுள்ளார்களா என்ற அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் ஏற்கனவே உள்ள பட்டியலில் இல்லை,  புதிதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதன் மூலம் பெற்றோர்களுக்கும் பொது மக்களுக்கும் வைக்கும் கோரிக்கை
என்னவென்றால் இது போன்ற வெடிகுண்டு மிரட்டல்களுக்கு யாரும் பயப்பட தேவையில்லை.  பதற்றம் அடைய தேவை இல்லை.  இரண்டு வகையான பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை இதுபோன்று சமயங்களில் காவல்துறை கையாளும். நேற்றைய தினம் கூட வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் முழுமையாக ஆய்வு செய்து இருக்கிறார்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று முழு பரிசோதனை மேற்கொண்டு இருக்கிறார்கள்.  எனவே தேவை இல்லாமல் பதற்றம் அடைய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பள்ளிகளுக்கு இ மெயில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக 9 காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  சென்னை அண்ணா நகர், ஜெ.ஜெ நகர்,  பட்டினப்பாக்கம்,  நந்தம்பாக்கம்,  மடிப்பாக்கம்,  ஓட்டேரி,  எஸ்பிளனேடு, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் 2 வழக்குகள் என மொத்தம் 9 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.  அந்தந்த பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags :
Advertisement