"மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படும் என ஜி.கே. மணியின் கோரிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.
தமிழ்நாடு சட்டசபையின் 4-வது நாளான இன்று கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். இந்த நிலையில், சட்டமன்ற பேரவையில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காட்டை நிறைவேற்ற வேண்டும் எனவும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் எனவும் பாமக உறுப்பினர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
பாமக உறுப்பினர் ஜி.கே.மணியின் கோரிக்கைக்கு அமைச்சர் ரகுபதி பதிலளித்ததாவது:
"கடந்த ஆட்சியில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு சரியான தரவுகள் இன்றி கொடுக்கப்பட்டதால் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டன. கல்வி, வேலைவாய்ப்பு , பொருளாதாரம் குறித்த தரவுகளை திரட்ட ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு தரவுகளை அரசே அந்த ஆணையத்திற்கு வழங்கிவிட்டது.
ஆனால் பொருளாதாரம் , சமூக மேம்பாட்டு தரவுகளை திரட்ட சாதிவாரி கணக்கெடுப்பு
அவசியம். எனவே தான் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். தற்போது பாமக மத்திய அரசினுடைய கூட்டணியில் இருக்கிறது. எங்கள் கோரிக்கையை நீங்களும் வலியுறுத்தி, மிக விரைவிலேயே சாதிவாதி கணக்கெடுப்பை நடத்த வைத்தால் அதன் பிறகு இந்த இட ஒதுக்கீட்டை நாம் பெற்றுக் கொள்ள முடியும். இந்த அரசு அதற்கு எந்த வகையிலும் தடையில்லை"
இவ்வாறு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
ஜி.கே.மணியின் கோரிக்கைக்கு முதலமைச்சர் பதிலளித்ததாவது:
"இப்போது பாமக எந்த கூட்டணியில் இருக்கின்றீர்கள் என அனைவருக்கும் தெரியும். மத்திய அரசிடம் வலியுறுத்தி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கூறுங்கள். நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுத்த பிறகு தான் இதை அமல்படுத்த முடியும். இல்லை என்றால் பிகார் போல தனி இட ஒதுக்கீடு நீக்கப்பட்டு விடும்.
இந்த பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டும் என்றால் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசால் விரைந்து எடுக்கப்பட வேண்டும். அதற்காக இந்த கூட்டத்தொடரிலேயே சட்டமன்ற உறுப்பினர் ஒரு தீர்மானத்தை கொண்டு வரலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். அதற்கு ஜி.கே. மணி ஆதரவு தர வேண்டும்"
இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது :
"10.5% என்பதை தேர்தல் காலத்தில் கடந்த அரசு சொல்லி சென்றுவிட்டது. முதலமைச்சர் தான் கொண்டு வந்தார். பல முயற்சிகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்து வந்தார். சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்தால் தான் எந்த அளவில் ஒதுக்கீடு செய்ய முடியும் என்று தெரியும்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு கூறியதாவது :
"உயர் நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் 10.5 சதவீத இட ஒதுக்கீடு தடை விதித்துள்ளதன் காரணமாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு போடப்பட்டுள்ளது. முடிவு வரட்டும், அதன் பின் செயல்படுத்தலாம். இப்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொடுத்ததை அனுபவியுங்கள் "
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சபாநாயகரின் பேச்சுக்கு பாமக உறுப்பினர் ஜி.கே.மணி கூறியதாவது :
" முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை ஒரு போதும் குறை சொல்லவில்லை. உள் ஒதுக்கீடு கொடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது" என தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது :
"10.5 % தாண்டி தான் அனைத்து வகையிலும் வன்னியர் சமூகத்தினர் இட ஒதுக்கிட்டை
பெறுகிறார்கள். நீங்கள் கேட்பது அதை குறைத்து கேட்பது போல் உள்ளது. உங்கள்
சமூகத்தில் தேர்ந்தவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்" என தெரிவித்தார்.