இன்று கோலாகலமாக தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா... முதல் ஆட்டத்தில் கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதல்!
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இன்று (மார்ச் 22) கோலகலமாக தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்துக்கு முன்பான தொடக்க நிகழ்ச்சியில் பாடகா்கள் ஷ்ரேயா கோஷல், கரண் அஜ்லா, பாலிவுட் நடிகை திஷா பட்டானி ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இந்த நிகழ்ச்சிகள் மாலை 6 மணியளவில் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகிறது. ஒரே நாளில் 2 ஆட்டங்கள் நடைபெற்றால் முறையே மாலை 3.30, இரவு 7.30 மணிக்கு போட்டிகள் தொடங்கும். மொத்தம் 70 போட்டிகளை கொண்ட லீக் சுற்று, மே 18ம் தேதி முடிகிறது. பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் மே 20, 21, 23 தேதிகளிலும், இறுதிப் போட்டி மே 25ம் தேதியும் நடைபெறும். இன்றைய ஆட்டத்திற்காக கொல்கத்தா, பெங்களூரு அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்த இரு அணிகளும் ஐபிஎல் தொடர்களில் 35 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் கொல்கத்தா 21 ஆட்டங்களிலும், பெங்களூரு 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. எந்த அணி வெற்றியுடன் தொடரை தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இதற்கிடையே, இன்று கொல்கத்தாவில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் 23ம் தேதி மும்பை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது.