மைதானத்தில் சரிந்து உயிரிழந்த 28 வயது கால்பந்து வீரர் - ரசிகர்கள் பேரதிர்ச்சி
கானா நாட்டைச் சேர்ந்த சர்வதேச கால்பந்து வீரர் ரபேல் டுவாமேனா மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
கானா நாட்டை சேர்ந்த சர்வதேச கால்பந்து வீரர் ரபேல் டுவாமேனா (28). அல்பேனியாவின் டாப் பிரிவில் உள்ள இரண்டு அணிகளான KF எக்னாட்டியா மற்றும் பார்டிஜானி ஆகிய இரு அணிகளுக்கிடையிலான போட்டியில் ரபேல் டுவாமேனா மைதானத்திலேயே திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ரபேல் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அவரின் இறப்பு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கானா கால்பந்து சங்கம் (ஜிஎஃப்ஏ) வெளியிட்டுள்ள செய்தியில் "இந்த கடினமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு ரபேல் டுவாமேனாவுக்கு இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் 2021ம் ஆண்டு ஆஸ்திரியாவில் நடந்த ஒரு ஆட்டத்தின் போது அவர் மைதானத்தில் இதேபோல் சரிந்து விழுந்து பின்னர் குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.