“பத்தாம் வகுப்பு தமிழ் பாடம் குறித்து பரவும் தகவல் ஒரு வதந்தி!” - தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடம் கட்டாயமில்லை எனப் பரவும் தகவல் ஒரு வதந்தி என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு உறுதிபடுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு X தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
வதந்தி:
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடம் கட்டாயமில்லை என கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் சிறுபான்மை மொழிகளில் தேர்வை எழுதிக்கொள்ளவும் அனுமதி.
உண்மை என்ன?
1. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடம் கட்டாயமில்லை என அரசு அறிவித்ததாக பொய் பரப்பப்படுகிறது.
2. தமிழ்நாடு அரசு கடந்த 2006-ம் ஆண்டு கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தின் மூலம் அனைத்து வகையான பள்ளிகளிலும் முதல் பாடமாக தமிழ் அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில், மொழிவாரி சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத் தேர்வு எழுதுவதில் இருந்து 2020 முதல் 2022-ம் ஆண்டு வரை விலக்கு அளித்து இருந்தது சென்னை உயர்நீதிமன்றம். இதை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், தேர்வில் விலக்கு என்பது 2023ம் ஆண்டிற்கும் பொருந்தும் என தீர்ப்பளித்துள்ளது.
3. இந்நிலையில், மொழி சிறுபான்மை பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் நியமனங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தமிழக மொழி சிறுபான்மை பேரவையினரின் கோரிக்கையை ஏற்று 2023-24 கல்வியாண்டிற்கு மட்டும் கட்டாய மொழிப் பாடமான தமிழ் தேர்வு எழுதுவதில் விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதை பொதுவாக அனைத்து மாணவர்களுக்கும் அறிவித்ததாக தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.
இதுபோன்ற தவறான தகவல்களை நம்ப வேண்டாம். இவ்வாறு தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது.
"தமிழ் பாடம் வேண்டாம் " என அரசு உத்தரவிட்டதாகப் பரவும் பொய்
Fact checked by FCU | @CMOTamilnadu @TNDIPRNEWS pic.twitter.com/82LtHLX9Xb
— TN Fact Check (@tn_factcheck) March 14, 2024