"அண்ணா பல்கலை. வழக்கில் வெளியாகும் தகவல்கள் ஆதாரமற்றவை" - DGP அலுவலகம் விளக்கம்!
அண்ணா பல்கலை. வழக்கில் வெளியாகும் தகவல்கள் ஆதாரமற்றவை என டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுகை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் ( 37) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே, இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. அரசியல் கட்சியினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக வெளியாகும் தகவல் அடிப்படை ஆதாரமற்றவை என டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளதாவது,
"ஞானசேகரன், சார் என ஒருவரிடம் பேசியதாக சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் பாதிக்கப்பட்ட பெண் கூறியதாகவும், ஆபாச பதிவுகள் கொண்ட மின்னணு உபகரணங்கள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் வரும் தகவல்கள் ஆதாரமற்றவை. திருப்பூரைச் சேர்ந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வரும் தகவலும் ஆதாரமற்றவை"
இவ்வாறு டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது.