For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி....

06:48 AM Nov 13, 2023 IST | Web Editor
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
Advertisement

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

Advertisement

உலக கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்து கம்பீரமாக அரையிறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி மீண்டும் ஒருமுறை அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி 410 ரன்களை குவித்த இந்திய அணி, பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டது. இந்திய அணியில் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலை தவிர மற்ற அனைத்து வீரர்களும் பந்துவீசினர். இதில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரும் ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். அபாரமாக கடந்த சில போட்டிகளில் பந்தவீசிய முகமது ஷமிக்கு இப்போட்டியில் ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை.

சின்னசாமி மைதானம் பேட்டிங் பிட்ச் என்பதால் டாஸ் வெற்றி பெற்றவுடன் பேட்டிங் செய்வதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அறிவித்தார். அதன்படி ஓப்பனிங் களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக ஆடினர். சுப்மன் கில் 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இதில் 4 சிக்சர்களும் 3 பவுண்டரிகளும் அடங்கும். இதேபோல் மற்றொரு முனையில் அதிரடியாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 54 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். இதில் பல்வேறு சர்வதேச கிரிக்கெட் சாதனைகளும் ரோகித் சர்மா வசம் வந்தது. ஒரு காலண்டர் கிரிக்கெட் ஆண்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர், உலக கோப்பையில் கேப்டனாக அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமைகளுக்கு சொந்தக்காரரானார்.

அவரைத் தொடர்ந்து வந்த விராட் கோலியும் அரைசதம் அடித்து அவுட்டானார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடித்தளம் அமைத்து கொடுத்ததை பயன்படுத்திக் கொண்ட ஸ்ரேயாஸ் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் அதிரடியாக ஆடி சதமடித்தனர்.

இதில் கே.எல்.ராகுல் 62 பந்துகளில் சதமடித்து உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் குறைந்த பந்தில் சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இவர்களின் ஆட்டத்தால் இந்திய அணி 410 ரன்கள் குவிக்க அடுத்து ஆடிய நெதர்லாந்து அணி 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடாவை பூர்வீகமாக கொண்ட நெதர்லாந்து வீரர் தேஜா நிடமானுரு மட்டும் அதிரடியாக ஆடி 39 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ரோகித் சர்மா பந்துவீச்சில் அவுட்டானார். இதில் 6 சிக்சர்களை விளாசிய அவர் ஒரே ஒரு பவுண்டரி மட்டும் அடித்தார். அவருக்கு அடுத்தபடியாக ஏங்கல்பிரெக்ட் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார். இறுதியில் தோல்வியை தழுவியிருந்தாலும் கவனிக்கதக்க வகையிலான ஆட்டத்தை நெதர்லாந்து அணி இந்த உலக கோப்பை முழுவதும் வெளிப்படுத்தியிருக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான இப்போட்டியிலும் அதனை பார்க்க முடிந்தது. அதேபோல் லீக் சுற்றுகளில் 9 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தோல்வி வாசமே பார்க்காமல் கம்பீரமாக அரையிறுதிப் போட்டிக்கு செல்கிறது. மும்பையில் நடைபெறும் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை சந்திக்க இருக்கிறது.

Advertisement