உலகக் கோப்பையுடன் தாயகம் திரும்பியது இந்திய அணி - விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!
ஐசிசி டி20 உலகக் கோப்பையுடன் தாயகம் திரும்பியது இந்திய அணிக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸில் இருந்து இந்தியா அணி தாயகம் திரும்பவதாக இருந்தது.
அந்த நிலையில் அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான ‘பெரில்’ புயல் தீவிரமடைந்தது. இந்த புயலால் இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் இந்திய வீரர்கள், அவரது குடும்பத்தினர். பயிற்சி குழுவினர், அதிகாரிகள் என 70 பேர் அங்கு சிக்கி தவித்தனர்.
புயல் கரையை கடந்ததை தொடர்ந்து இந்தியா அணி வீரர்கள் பார்படாசில் இருந்து தனி விமானம் மூலம் கிளம்பினர். இந்த விமானம் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தது. இந்த நிலையில், அதிகாலை முதலே விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில் தாயகம் திரும்பியுள்ள இந்திய வீரர்கள் இன்று காலை 11மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுகின்றனர். அதன் பிறகு, மும்பை திரும்பும் இந்திய வீரர்கள் கோப்பையுடன் நாரிமன் பாய்ன்ட் பகுதியிலிருந்து மெரைன் டிரைவ் வரை, மேற்கூரை திறந்த பேருந்தில் ஊர்வலமாகச் செல்கின்றனர். பின்னர், மாலை சுமார் 5 மணியளவில் வான்கடே மைதானத்தில் அவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.