”இஸ்ரேலுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்”- வைகோ பேட்டி!
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”ஒவ்வொரு கூட்டத்திலும் ஒவ்வொரு பொருளை எடுத்து தமிழகத்தில், நானும் என் சகாக்களும் எப்படி பாடுபட்டோம் என்பதை, இளைய தலைமுறையினருக்கு எடுத்துக் கூறுகிறோம். இன்றைய நிலையையும் எதிர்காலத்தில் என்ன ? செய்ய வேண்டும் என்பதையும், இளைஞர்களுக்கு எடுத்துக் கூறிக் கொண்டு இருக்கிறோம். தமிழகத்தில் வாழ்வாதாரங்களுக்கு இன்னும் ஒரு சில இடங்களில் பாதிப்பு வரும் பட்சத்தில் அதற்கான போராட்டத்தை நாங்கள் நிச்சயம் முன்னிறுத்தி செல்வோம்.
உலகின் பல பகுதிகளில் கடந்த காலங்களில் பல அழிவுகள் ஏற்பட்டு இருக்கின்றன. ஆனால் பாலஸ்தீனம் காசா பகுதியில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பாலஸ்தீனியர்கள், இஸ்ரேல் முப்படைகளால் கொல்லப்பட்டு விட்டார்கள். அதே போல மேலும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் படுகாயம் முற்று இருக்கிறார்கள்.
இப்படி ஒரு படுகொலை இஸ்ரேல் அரசால் நடத்தப்படுவதற்கு கண்டனம் தெரிவிப்பது மட்டுமல்ல, ஜவஹர்லால் நேரு காலத்தில் பாலஸ்தீனத்தை அங்கீகரித்தது மட்டுமல்லாமல், அதன் பின்னர் வெளியிலேயே அவர்களுக்கு தூதரகம் அமைத்துக் கொடுத்த இந்திய அரசு, இந்தக் கட்டத்தில் இஸ்ரேலுக்கு கடுமையான கண்டனமும் எச்சரிக்கையும் செய்ய வேண்டும். காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் இனப் படுகொலை செய்யப்படுகிறார்கள். அதைக் கண்டித்து தடுத்து நிறுத்த பிரதமர் நரேந்திர மோடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அது தற்போது வரை எடுக்கப்படவில்லை. பாலஸ்தீனத்தை முழுமையாக சுதந்திரம் பெற்ற அரசாக நாங்கள் அங்கீகரிக்கிறோம் என சொல்லி ஐநா சபையின் பொதுக் குழுவில் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்திக் கொள்கிறேன்.
சி.பி ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக வேபாளராக அறிவிக்கப்பட்டதற்கு எங்களுடைய மகிழ்ச்சிகரமான,வாழ்த்துக்களை மறுமலர்ச்சி திராவிட கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ராஜ்ய சபையின் அவை தலைவராக இருந்து சிறப்பாக நடத்துவதற்கு வாழ்த்து சொல்கிறேன். துணை குடியரசு தலைவர் அடுத்த கட்டத்தில் குடியரசு தலைவராக கூட வாய்ப்புகள் உள்ளது. எனவே கட்சி எல்லைகளைக் கடந்து நம்முடைய தாய் தமிழகத்தினுடைய ஒரு தமிழர், நல்ல பண்பாளர் அனைவரையும் மதிக்க கூடிய சி.பி. இராதாகிருஷ்ணன் அவர்கள் துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்க இருப்பதை உணர்ந்து நான் வாழ்த்துக்களை, பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் பேசிய அவர் “பீகாரில் மட்டும் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். இது ஒரு அப்பட்டமான ஜனநாயக படுகொலை. தேர்தல் ஆணையம் அப்படி ஒன்றுமே நடக்கவில்லை என சமாதானம் சொல்கிறது. ஆனால் ஆவணங்களும் எதிர்க்கட்சித் தலைவர்களுடைய கிடைத்து இருக்கிற ஆவணங்களும் சான்றுகளும் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள் என சொல்கிறது.. வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட பெயர்கள் இடம் பெற வேண்டும் என்பதை ஜனநாயகத்தை விரும்பும் அனைவரின் கோரிக்கையாகும்.
மதுரை தூய்மை பணியாளர்கள் போராட்டம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், ”ஆதித்தமிழர் பேரவை கூட இது குறித்து அறிக்கை கொடுத்து இருக்கிறது, இதுகுறித்து அமைச்சரவையும் முதலமைச்சரும் நீண்ட நேரம் விவரித்து ஆலோசனை செய்து இருக்கிறார்கள். இப்பொழுது இந்த கோரிக்கைகளும் வந்து இருப்பதை பொறுத்து அரசு என்ன ? முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். அவர்கள் அதே பணியை திரும்பத், திரும்ப செய்ய வேண்டியது இல்லை என்பதில் எனக்கு முழு உடன்பாடு கொண்டு. தந்தை செய்கிற வேலையை தான் பிள்ளை செய்ய வேண்டும் என்பது சமூக நீதிக்கு விரோதமானது” என்று கூறினார்.