Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"சிலிண்டர் விலை உயர்வு சாமானிய மக்கள் மீதான நேரடித் தாக்குதல்" - தவெக தலைவர் விஜய் கண்டனம்!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
12:06 PM Apr 08, 2025 IST | Web Editor
Advertisement

வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ 50 உயர்த்தி மத்திய அரசு நேற்று (ஏப்.7) அறிவித்திருந்தது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

"மக்களை வதைக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்!

மத்திய பாஜக அரசு அறிவித்துள்ள சமையல் எரிவாயு (Gas Cylinder) விலை உயர்வு, சாமானிய மக்கள் மீதான நேரடித் தாக்குதலாகும். மக்களின் அன்றாட வாழ்வே போராட்டமாக இருக்கின்ற சூழலில், மத்திய அரசின் இந்த விலையேற்றம், மக்களை மேலும் வாட்டி வதைப்பதாகவே அமைந்துள்ளது. ஒவ்வொரு முறையும் சமையல் எரிவாயு வாங்கும் போது, அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற அறிவிப்பைக் காற்றில் பறக்கவிட்ட மத்திய ஆட்சியாளர்கள், மக்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்ற நினைப்பில் உள்ளனர்.

தற்போது அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்து விட்ட நிலையில், மக்களுக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்றும் வகையில் சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியிருப்பது ஏற்கத்தக்கது இல்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் சமையல் எரிவாயு விலையைக் குறைப்பதையும், தேர்தலுக்குப் பின்னர் விலையை ஏற்றுவதையும் வாடிக்கையாக வைத்துள்ள மத்திய ஆட்சியாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை, முன்னெப்போதும் இல்லாத அளவிற்குச் சரிந்திருக்கிறது. அதன் பயனை 'ஒருசிலர்' மட்டுமே அனுபவிக்க அனைத்துச் சலுகைகளையும் வழங்கி வரும் மத்திய அரசிற்கு, மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது வரும்? தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்கள் மீது கரிசனம் வருமா? மத்திய அரசு இவ்வாறிருக்க, கடந்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக, 'கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் கொடுப்போம்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக அரசும், நான்கு ஆண்டுகளைக் கடந்தும் எதுவும் செய்யவில்லை.

தேர்தல் வெற்றிக்காக, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, பின்னர் மக்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் ஏமாற்றி வருகிறது. இந்தப் போக்கைத் திமுக அரசு எப்போது நிறுத்தும்? என்று மக்கள் கேட்கிறார்கள். பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி, வாட்டி வதைப்பதில் மத்திய பாஜக அரசும் திமுக அரசும் இணைந்த கைகளாகவும், இரட்டைக் குழல் துப்பாக்கியாகவும் செயல்படுகின்றன. சாமானிய மக்களைப் பெரிதும் பாதிக்கும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

இந்த விஷயத்தில் மத்திய அரசு மீது பழிபோட்டுவிட்டுத் தப்பித்து விடலாம் என்ற நினைப்பில் இருக்கும் திமுக அரசு, இந்த நேரத்திலாவது மனசாட்சிப்படி, தேர்தல் அறிக்கையில் அறிவித்த சமையல் எரிவாயு மானிய வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும். மீண்டும் மீண்டும் பொய் சொல்லி, ஏமாற்றும் வழக்கத்துடன் செயல்படும் மத்திய பாஜக அரசு மற்றும் திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, மக்கள் போராட்டத்தின் எதிர்வினை மிகத் தீவிரமாக இருக்கும். மக்களோடு தமிழக வெற்றிக் கழகம் களத்தில் நிற்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்"

இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

Tags :
தமிழக வெற்றிக் கழகம்தவெகBJPcylinderLPG Gas Cylindernews7 tamilNews7 Tamil UpdatestvkTVK Vijayvijay
Advertisement
Next Article