கோவையில் மண்டல தலைவர் மீனா லோகு இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை!
கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை நடக்க உள்ளது. தமிழ்நாட்டில் ஏப். 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பின்னர், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. பணப் பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படையினர், வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சுமார் ஒன்றரை மணி நேரம் நடத்திய சோதனையில் வீட்டில் இருந்து எந்த பொருளும் கைப்பற்றப் படவில்லை. வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்ய வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.