கணவன் இறந்துவிட்டதாக தவறாக அறிவித்த மருத்துவமனை - சோகத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி!
கணவன் இறந்துவிட்டதாக தவறுதலாக மருத்துவமனை அறிவித்ததைத் தொடர்ந்து சோகம் தாங்க முடியாமல் மனைவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒடிசாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள ஹைடெக் மருத்துவமனையில் கடந்த டிச. 29 அன்று ஏ.சி. பழுதானது. சம்பந்தப்பட்ட ஏ.சி. நிறுவனத்தை சேர்ந்த ஒப்பந்த ஊழியர்கள் 5 பேர் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது தீடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
படுகாயமைடைந்த ஜோதிரஞ்சன், திலீப், சிமாஞ்சலந்து ஸ்ரீதம்ஹத் ஆகியோர் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் டிசம்பர் 30 அன்று திலீப் இறந்துவிட்டதாக மருத்துவமனை அறிவித்தது. திலீப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக கருதி அவரது உடலை மருத்துவமனை நிர்வாகம் அவரது உறவினர்களிடம் காவல் நிலையம் மூலம் ஒப்படைத்தது.
திலீப்பின் உறவினர்கள் இறந்த உடலுக்கு இறுதி மரியாதை செய்து மத வழக்கப்படி எரியூட்டினர். கணவன் இறந்த துக்கத்தில் திலீப்பின் மனைவியான சோனா புத்தாண்டு தினத்தன்று சோகம் தாங்க முடியாமல் தன் உயிரை தானே மாய்த்துக் கொண்டார். இந்த நிலையில் ஜன.3 ம் தேதி உயிரிழந்ததாக கருதப்படும் திலீப் படுகாயங்களுடன் மருத்துவமனையில் உள்ளார் எனவும் தவறுதலாக ஜோதிரஞ்சன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும் மருத்துவமனை அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து திலீப்பின் உறவினர்களும், ஜோதிரஞ்சனின் உறவினர்களும் போரட்டத்தில் இறங்கினர். மருத்துவமனையின் அலட்சியமே இதற்கு காரணம் என்றும் இதன் மூலம் தனது குடும்பமே சிதைந்து விட்டது தனது மருமகள் இறந்துவிட்டார் என வருத்தத்தோடு ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இதேபோல ஜோதிரஞ்சனின் குடும்பத்தார் இறுதி காரியத்திற்கு கூட எங்களது மகனின் உடல் கிடைக்கவில்லேயே என கண்ணீர்மல்க தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில் இந்த விவகாரத்தில் மருத்துவமனை மீது எந்த தவறும் இல்லை. பணியாளர்கள் வேலை செய்யும் ஏ.சி.நிறுவனம் கொடுத்த அடையாளங்களை வைத்துத்தான் தாங்களை இறந்தவர் குறித்த தகவலை அறிவித்தோம் என தெரிவித்தனர். எது எப்படியோ அப்பாவி மக்களின் உயிர் அநியாயமாக பறிபோனதது தான் மிச்சம் என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.