வறுமையின் கோரதாண்டவம்... மனநலச் சீர்வேண்டும் பேரனுடன் தவிக்கும் மூதாட்டி... உதவிக்கரம் நீட்ட கோரிக்கை!
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி கமலா (வயது 55). இவர் தனது மகன் மற்றும் மருமகளால் கைவிடப்பட்ட 3 பேரன்களையும் வளர்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மூதாட்டியை பாம்பு தீண்டியதால் மூட்டுவலி ஏற்பட்டு சரியாக நடக்க முடியாமல் தவித்துள்ளார். மேலும், வறுமையின் காரணமாக தனது இரண்டு பேரன்களை அரசு காப்பத்தில் சேர்த்துவிட்டார். முதல் பேரனான பார்வையற்ற மற்றும் மனநலச் சீர்வேண்டும் சிறுவனை அரசு காப்பகமே ஏற்க மறுத்ததால் அவரை மட்டும் தன்னுடன் வைத்து வளர்த்து வருகிறார்.
முதுமையின் காரணமாக மூதாட்டியால் எந்த வேலையும் செய்ய முடியாத நிலையில், அரசு வழங்கும் 2 ஆயிரம் ரூபாயை வைத்து வீட்டிற்கு வாடகை கொடுத்தும், ரேஷன் பொருட்களை சமைத்து சாப்பிட்டும் பாட்டியும் பேரனும் வாழ்ந்து வருகிறார்கள். வருவாய் இல்லாமல் மூதாட்டி தனது மனநலச் சீர்வேண்டும் பேரனுடன் சிரமப்பட்டு வரும் சம்பவம் குறித்து நியூஸ் 7 தமிழ் சேனல் கடந்த வாரம் செய்தி தொகுப்பாக வெளியிட்டது.
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக தஞ்சை ரெனிவல் பவுண்டேஷன் உரிமையாளர் வீரமணி, நியூஸ் 7 அன்பு பாலத்துடன் கைக்கோர்த்து அவரது நிறுவனத்தின் தஞ்சை பசி இல்லா கருணை பயணத்தின் ஆட்டோவில்
சிறுவனையும் பாட்டியையும் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். கோரிக்கையை ஏற்று தஞ்சை மேக்ஸ் விஷன் மருத்துவமனை சிறுவனுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்வதாக ஒப்புக் கொண்டது.
இதனையடுத்து சிறுவனுக்கு பார்வை கிடைக்க வழி இருக்கிறதா? என்பதை அறிய மேக்ஸ் விஷன் மருத்துவமனையின் மருத்துவர் சிவ விக்னேஷ் சிறுவனுக்கு பரிசோதனை மேற்கொண்டார். பின்னர் அவர், தஞ்சை அரசு ராசா மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் பழனிச்சாமியிடம் ஆலோசனை பெற
அறிவுறுத்தினார். தொடர்ந்து, மூதாட்டி மற்றும் சிறுவன் ஆகிய இருவரும் ரெனிவல் பவுண்டேஷன் அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டு மறுநாள் அரசு மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
சிறுவனை பரிசோதனை செய்த அரசு மருத்துவர் பழனிச்சாமி, சிறுவனுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டாலும், அவரால் மற்றொருவர் உதவி இன்றி
வாழ்வது கடினம் என தெரிவித்தார். பரிசோதனைக்கு பிறகு மூதாட்டியும், சிறுவனும் அய்யம்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம், மூதாட்டிக்கு தேவையான உதவியை செய்ய கோரிக்கை விடுத்தது. பின்னர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், மூதாட்டிக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள அரசு சார்பில் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ, அதனை உடனடியாக செய்ய வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் சார்பில் சிறிய நிதி உதவி வழங்கப்பட்டது. மேலும், மூதாட்டியின் வங்கி கணக்கிற்கு, நல்ல உள்ளங்கள் சார்பில் பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 30 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து கமலா பாட்டி நியூஸ் 7 தமிழ் செய்திக்கும் உதவியாக இருந்த தன்னார்வலர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். மன நலச் சீர் வேண்டும் பேரனுடன் வறுமையால் வாடிக்கொண்டிருக்கும் மூதாட்டி கமலாவிற்கு உதவ முன்வரும் நல்ல உள்ளங்கள், வங்கிக் கணக்கு எண்ணிற்கு நேரடியாக பணத்தை அனுப்பியும் அல்லது அன்பு பாலத்தை தொடர்புகொண்டும் உதவலாம்.
மூதாட்டி கமலாவின் வங்கி கணக்கு விவரம்:
பெயர் : கமலா
வங்கியின் பெயர் : State Bank of India
கிளை : பாபநாசம்
வங்கி கணக்கு எண் : 31071772463
IFSC : SBIN0000797