தலைமை தேர்தல் ஆணையர் பயணித்த ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்!
உத்தரகாண்டில் தலைமை தேர்தல் ஆணையர் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
உத்தரகண்ட் மாநிலம், பித்ரோகரில் உள்ள தொலைதூர வாக்குச்சாவடிகள் மற்றும் அருகிலுள்ள 14 கிராமங்களுக்கு நேரில் சென்று, உயரமான மலைப் பகுதியில் தோ்தல் அதிகாரிகள் மற்றும் வாக்காளா்கள் எதிா்கொள்ளும் சவால்கள் குறித்து அறிந்து கொள்ள ராஜீவ் குமாா் திட்டமிட்டிருந்தாா். அதன்படி, புதன்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் புறப்பட்ட ஹெலிகாப்டா், மிலாம் பனிப்பாறை அருகே சென்றுகொண்டிருந்தபோது மேகமூட்டமான வானிலை காரணமாக பிற்பகல் 1.30 மணியளவில் தொலைதூர மலைக் கிராமத்தில் தரையிறக்கப்பட்டது
அங்கே ஆள் இல்லாத வீட்டில் புதன்கிழமை இரவு ராஜீவ் குமாா் தங்கினாா். அவருடன் இரு விமானிகள், இரு தோ்தல் அலுவலா்களும் தங்கினா். பின்னா், வானிலை சீரானதும் வியாழக்கிழமை காலை ஹெலிகாப்டா் மீண்டும் புறப்பட்டு முன்சியாரி தாலுகா தலைமையகத்தை பாதுகாப்பாக சென்றடைந்தது.
தலைமைத் தோ்தல் ஆணையராக ராஜீவ் குமாா் கடந்த 2022-ஆம் ஆண்டு பொறுப்பேற்றவுடன், உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கு இதேபோல் ஆய்வு செய்ய நடைப்பயணம் மேற்கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய கடுமையான நிலப்பரப்புகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை (இவிஎம்) கொண்டு செல்ல சிறப்புப் பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.