இளம்பெண்ணின் உயிர்காக்க வேலூரிலிருந்து 90 நிமிடங்களில் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட இதயம்!
வேலூரிலிருந்து சென்னனைக்கு 90 நிமிடங்களிலேயே மனித இதயம் கொண்டுவரப்பட்டு, இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சாலை விபத்து ஒன்றில் சிக்கி பலத்த காயமுற்ற 20 வயது இளைஞர் வேலூர், சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி, மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அந்த இளைஞரின் இதயம் தானமாகப் பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து, எம்ஜிஎம் மருத்துவமனையின் இதயம் நுரையீரல் மாற்று சிகிச்சை நிபுணர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், நேற்று காலை வேலூர் சென்று இளைஞரின் இதயத்தை பாதுகாப்பாக எடுத்துக் கொண்டு காலை 11.07 மணிக்கு சாலை மார்க்கமாக சென்னை புறப்பட்டனர்.
காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், மதுரவாயில், கோயம்பேடு வழியாக அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு பகல் 12.35 மணிக்கு இதயம் கொண்டுவரப்பட்டது. அங்கு இதய செயலிழப்புக்கு உள்ளாகி அனுமதிக்கப்பட்டிருந்த 34 வயதுப் பெண்ணுக்கு, அந்த இதயத்தை டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் வெற்றிகரமாகப் பொருத்தினர்.
சாலைப் போக்குவரத்தில் எந்த இடையூறும் ஏற்படாத வகையில், தடையற்ற வழித்தட (கிரீன் காரிடர்) வசதியைப் போக்குவரத்துக் காவல்துறையினர் வழங்கியதால் இது சாத்தியமாகியிருக்கிறது.