மலையாளிகளின் அறுவடைத் திருவிழா - ஓணம் கொண்டாட்டம் ஆரம்பம்!
மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய அறுவடைத் திருவிழாவான ஓணம் பண்டிகை, ஆவணி மாதத்தில் அத்தம் நட்சத்திரம் முதல் திருவோண நட்சத்திரம் வரை 10 நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதன் முதல் நாளான இன்று (அத்தம் நட்சத்திரம்) கேரள மக்கள் தங்கள் கொண்டாட்டங்களைத் தொடங்கி உள்ளனர்.
புராணக் கதைகளின்படி, மாவேலி மன்னனை வரவேற்கும் விதமாக வீடுகள் மற்றும் கோவில்களின் வாசல்களில் பெண்கள் வண்ண வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் போட்டு மகிழ்ந்தனர்.
திருவிழாவின் முதல் நாளிலேயே, திருவாதிரை நடனம் போன்ற பாரம்பரிய நடனங்களை ஆடியும், கலை நிகழ்ச்சிகளை நடத்தியும் கொண்டாட்டங்கள் களைகட்டின.
திருச்சூரில் உள்ள வடக்கு நாதர் கோவிலின் முன்பு பிரம்மாண்டமான அத்தப்பூ கோலம் வரையப்பட்டுள்ளது.திருவனந்தபுரத்தில், கேரள அரசின் சார்பில் ஓணத்தைக் கொண்டாடும் விதமாகப் பல்வேறு கண்காட்சிகளும், கலை ஊர்வலங்களும் நடைபெற்றன.
ஓணம் பண்டிகையின் முக்கிய நிகழ்வான அறுசுவை உணவுடன் கூடிய ஓணசத்யா, வரும் 5-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்தத் திருவிழா, கேரள மக்களின் பாரம்பரியம், கலாச்சாரம், மற்றும் அன்பைப் பிரதிபலிப்பதாக உள்ளது.