Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“பட்டாசு தொழிற்சாலைகளில் உயிரிழப்போரின் குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

01:30 PM Nov 10, 2024 IST | Web Editor
Advertisement

“பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான அனைத்து கல்விச் செலவையும் அரசே ஏற்கும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக நேற்று விருதுநகர் சென்றார். நேற்று பட்டாசு ஆலை, அரசு குழந்தை காப்பகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

அதனைத்தொடர்ந்து இன்று விருதுநகரில் நடைபெற்ற அரசு விழாவில், 77 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;

மருது சகோதரர்கள் போல இந்த மண்ணுக்கு தூணாக விளங்கக்கூடிய அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ் ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசுக்கு பாராட்டு. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனுக்கும் பாராட்டுக்கள். விருதுநகர் என்றவுடன் நமது நினைவுக்கு வருபவர் சங்கரலிங்கனார். மெட்ராஸுக்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என உயிர் தியாகம் செய்தவர்.

காஞ்சி பேரறிஞர் அண்ணாவை பெற்றெடுத்தது. திருவாரூர் கருணாநிதியை உருவாக்கியது. இந்த விருதுநகர் காமராஜரை வழங்கியது. காமராஜர் என்றதும் எனக்கு நினைக்கு வருவது எனது திருமணம். உடல் நலிவுற்ற போதிலும் எனது திருமணத்திற்கு வந்து எங்களை வாழ்த்தியவர் காமராஜர். அதை என்னால் மறக்க முடியாது. விருதுநகருக்கு திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன.

தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கி, சாஸ்தா கோயில் அணைக்கட்டு என எண்ணற்ற திட்டங்களை செய்துள்ளோம். விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. பட்டாசு வெடி விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளின் அனைத்து கல்விச்செலவையும் தமிழக அரசே ஏற்கும்.

இதற்கான தனி ஆணையம் அமைத்து, முதற்கட்டமாக 5 கோடி ஒதுக்கப்படும். வத்திராயிருப்பு அருகே உள்ள பிளவக்கல் பெரியாறு அணை பூங்காவை சீரமைக்க 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே அதிகளவு உயர்கல்வி சேர்க்கை விருதுநகர் மாவட்டத்தில் தான் நடைபெறுகிறது. அருப்புக்கோட்டை அருகே 400 ஏக்கர் பரப்பளவில் ரூ.350 கோடி செலவில் புதிய சிப்காட் தொழில் வளாகம் அமைக்கப்படும்.

இந்தியாவின் புகழ்பெற்ற பத்திரிகையான 'இந்தியா டுடே' சக்தி வாய்ந்த டாப் 10 தலைவர்கள் பட்டியலில் என்னுடைய பெயரையும் குறிப்பிட்டு இருந்தார்கள். இது தனிப்பட்ட ஸ்டாலினுக்கு கிடைத்த பெருமையா புகழா என்றால் இல்லை. இந்த புகழையும் வழங்கியது தமிழ்நாட்டு மக்களான நீங்கள்தான். உங்களுடைய அன்பும் ஆதரவும்தான் இந்த ஸ்டாலினின் பலம்.

தமிழ்நாட்டை உயர்த்த நான் என்னுடைய சக்திக்கு மீறியும் உழைப்பேன் போராடுவேன். இந்த உழைப்பின் பயன்தான் எல்லா புள்ளி விவரங்களிலும் வெற்றிகரமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. முதலிடம் வந்ததற்காக ஒரு போதும் நான் திருப்தியடைந்ததில்லை. இன்னும் வேகமாக ஓட வேண்டும். அதைதான் அமைச்சர்களிடமும், அரசு அலுவலர்களிடமும் எதிர்பார்க்கிறேன்.

கலைஞர் பெயரில் மக்களுக்கு பயன்படாத திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படுகிறது என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். எனக்கு சிரிப்புதான் வருகிறது. பொய் சொல்லலாம்; ஏக்கர் கணக்கில் பொய் சொல்ல கூடாது.

உங்களுடைய ஆணவத்திற்காகத் தமிழ் நாட்டு மக்கள் உங்களைத் தோற்கடித்துக்கொண்டே தான் இருப்பார்கள்.80 ஆண்டுகள் ஓயாமல் தமிழ்நாட்டுக்காக உழைத்த தலைவர் கருணாநிதியின் பெயரைத் திட்டங்களுக்கு வைக்காமல் வேறு யார் பெயரை வைக்கவேண்டும்? கருணாநிதிதான் எப்போதும் தமிழ்நாட்டைக் காக்கக் கூடிய காவல் அரண்”. கருணாநிதியின் பெயரை வைத்ததில் பெருமை அடைகிறேன். என்றும் , எப்போதும் மக்களுக்கு உறுதுணையாக, வளர்ச்சிக்கு சேவகனாக என்னுடைய படைகள் தொடரும்” எனப் பேசினார்.

Tags :
CMO TamilNaduEducation ExpensesMK StalinTN GovtVirudhunagar
Advertisement
Next Article