For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"தொழில் முதலீட்டை ஈர்க்க தமிழ்நாட்டின் திறனை அரசு அதிகரிக்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்!

தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கான தமிழ்நாட்டின் திறனை அரசு அதிகரிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
10:40 AM Mar 31, 2025 IST | Web Editor
 தொழில் முதலீட்டை ஈர்க்க தமிழ்நாட்டின் திறனை அரசு அதிகரிக்க வேண்டும்    அன்புமணி ராமதாஸ்
Advertisement

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

Advertisement

"சீனாவைச் சேர்ந்த மின்சார மகிழுந்து நிறுவனமான பி.ஒய்.டி (BYD - Build Your Dreams) ரூ. 85 ஆயிரம் கோடி முதலீட்டில் இந்தியாவில் அதன் முதலாவது மகிழுந்து உற்பத்தி ஆலையை தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டிற்கு இந்த மகிழுந்து ஆலையைக் கொண்டு வருவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்தும் கூட, அந்த வாய்ப்புகளை தமிழக அரசு தவறவிட்டுள்ளது.

உலக சந்தையில் மின்சார வாகனங்கள் விற்பனையில் டெஸ்லா நிறுவனத்தை விஞ்சி வரும் பி.ஒய்.டி மகிழுந்து ஆலையை தங்கள் மாநிலத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு, குஜராத், மராட்டியம், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் போட்டியிட்டன. இந்த மாநிலங்களில் தமிழ்நாட்டுக்குத் தான் அதிக வாய்ப்புகள் இருந்தன.

அதற்குக் காரணம், 2019-ஆம் ஆண்டிலேயே பி.ஒய்.டி மகிழுந்து நிறுவனம் ரூ.2,800 கோடி செலவில் உதிரிபாகங்களை இணைத்து மின்சார வாகனங்களை உருவாக்கும் ஆலையை அமைத்திருந்தது. ஆனாலும் தமிழக அரசால் பி.ஒய்.டி நிறுவனத்தைத் தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை.

மின்சார மகிழுந்துகள் உற்பத்திக்கு சாதகமான கொள்கைகள் நடைமுறைப் படுத்தப்படுவதும், அரசின் அனுமதியை பெறுவது மிகவும் எளிதாக இருப்பதும் தான் பி.ஒய்.டி மகிழுந்து நிறுவனம் தெலுங்கானாவுக்கு செல்வதற்கு காரணம் ஆகும். ஆசியாவின் டெட்ராய்ட் சென்னை தான் என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்து வரும் நிலையில், உலகின் மிகப்பெரிய மின்னனு வாகனங்கள் உற்பத்தி நிறுவனம் தமிழகத்தைப் புறக்கணித்து விட்டு தெலுங்கானாவுக்கு சென்றிருப்பது உண்மையாகவே கவலை அளிக்கிறது.

ஆந்திர மாநிலத்திடம் ரூ.8,000 கோடி மதிப்பிலான அந்நிய முதலீடுகளை கடந்த 3 மாதங்களில் தமிழக அரசு இழந்து விட்டதாக சில நாட்களுக்கு முன்பு தான் செய்திகள் வெளியாகியிருந்தன. அந்த வருத்தம் மறைவதற்கு முன்பாகவே தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டிய ரூ.85 ஆயிரம் கோடி முதலீடு கைநழுவி தெலுங்கானாவுக்கு சென்றிருக்கிறது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான தமிழகத்தின் திறன் குறைந்து வருவதையே இது காட்டுகிறது.

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் கடந்த முறை மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, நடப்பாண்டில் பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள 30 வகையான சீர்திருத்தங்களில் பெரும்பான்மையானவற்றை தமிழக அரசு செய்யவில்லை என்பது தான் இதற்குக் காரணம் ஆகும்.

தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு செல்வது ஏன்? தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தமிழ்நாடு எங்கு பின் தங்கியிருக்கிறது? முதலீடுகளை ஈர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்தெல்லாம் தமிழக அரசு ஆராய வேண்டும். அதனடிப்படையில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கான தமிழ்நாட்டின் திறனை அரசு அதிகரிக்க வேண்டும்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
Advertisement