தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து சேற்றில் சிக்கி விபத்து!
நெல்லையில் தற்காலிக ஓட்டுநர் மூலம் இயக்கப்பட்ட பேருந்து ஒன்று சேற்றில் சிக்கி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளன. அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் போராட்டத்தை தொடங்கினர்.
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியரும், வேலைக்குச் செல்பவர்களும் கடும் அவதியடைந்துள்ளனர். பல ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணிக்கு வராததால், வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் இயக்கப்படாமல், குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதையும் படியுங்கள் : போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் - பேருந்து கிடைக்காமல் மாணவர்கள் கடும் அவதி!!
இதனிடையே தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் பேருந்துகள் ஆங்காங்கே இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நெல்லையிலும் பல்வேறு வழித்தடங்களில் தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நெல்லையில் இருந்து ராஜவல்லிபுரம் பாலாமடைக்கு தற்காலிக ஓட்டுநர் மூலம் இயக்கப்பட்ட பேருந்து ஒன்று சேற்றில் சிக்கி விபத்துக்குள்ளானது. இதனால் அதில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியும் அவதியும் அடைந்தனர்.