For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்திய அணிக்கு தலைமை ஏற்கும் தலைநகரின் தங்க மகன்... - யார் இந்த கௌதம் கம்பீர்‌?

07:07 AM Jul 10, 2024 IST | Web Editor
இந்திய அணிக்கு தலைமை ஏற்கும் தலைநகரின் தங்க மகன்      யார் இந்த கௌதம் கம்பீர்‌
Advertisement

இந்திய கிரிக்கெட் வீரர் , நாடாளுமன்ற உறுப்பினர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பயிற்சியாளர் என பல முகங்களை கொண்ட கௌதம் கம்பீர் இந்திய கிரிக்கெட்
அணியின் தலைமை பயிற்சியாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். யார் இந்த கௌதம் கம்பீர் விரிவாக காணாலாம்.

Advertisement

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையை இந்தியா வெற்றி பெற்றதோடு தனது ஓய்வை அறிவித்தார். இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர்ந்து செயல்பட ராகுல் டிராவிட் விருப்பம் தெரிவிக்காத நிலையில், கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜூலை 9 அன்று நியமிக்கப்பட்டுள்ளார். யார் இந்த கௌதம் கார்த்திக் விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு.    1984 ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி டெல்லியில் பிறந்தவர் கௌதம் கம்பீர். டெல்லியில் தனது பள்ளிப் படிப்பை தொடர்ந்த கம்பீர் தனது 10வயது முதல் கிரிக்கெட் விளையாடி வருகிறார். கிரிக்கெட்டில் ஆர்வம் இருந்த கம்பீருக்கு டெல்லியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி அகாடமியின் பயிற்சியாளரான சஞ்சய் பரத்வாஜ் பயிற்சி அளித்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2000ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு கம்பீர் தேர்வு செய்யப்பட்டார்.

உள்ளூர் கிரிக்கெட்டில் இடது கை பேட்ஸ்மானாகவும் தொடக்க ஆட்டக்காரரராகவும் களமிறங்கிய கம்பீர் முதன்முறையாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 2003ம் ஆண்டு வங்க தேச அணிக்கு எதிராக களமிறங்கினார். அதேபோல இதே வருடத்தில்தான் தனது சர்வதேச முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். 2010 மற்றும் 2011 காலகட்டத்தில் அவர் 6ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு அனைத்து போட்டிகளிலும் இந்திய அணியை வெற்றிபெற செய்துள்ளார்.

தொடர்ந்து ஐந்து டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த ஒரே இந்தியர் என்கிற பெருமையையும் அதேபோக தொடர்ந்து நான்கு டெஸ்ட் தொடர்களில் 300 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே இந்திய பேட்ஸ்மேன் என்கிற பெருமையும் கௌதம் கம்பீரையே சாரும். 2008 ஆம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது உயரிய விளையாட்டு விருதான அர்ஜுனா விருதை இந்தியக் குடியரசுத் தலைவர் கௌதம் கம்பீருக்கு வழங்கினார்

2003 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை இந்திய அணியில் நட்சத்திர வீரராக
வலம் வந்தவர் கௌதம் கம்பீர். இந்திய அணி 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை கைப்பற்றியதற்கும் 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கேப்பையை கைப்பற்றியதற்கும் கௌதம் கம்பீர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

2018 டிசம்பர் மாதம் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஒய்வை அறிவித்த கம்பீரை 2019ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது அளித்து மத்திய அரசு கௌரவபடுத்தியது‌. பிறகு 2019 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்ட கௌதம் கம்பீர் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

ஐபிஎல் போட்டிகளில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார் கௌதம் கம்பீர். மேலும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும் ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்தார் கௌதம் கம்பீர்.  நடப்பு ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியதற்கு கௌதம் கம்பீர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்த ராகுல் டிராவிட் பதவி
காலம் முடிவடையவே கொல்கத்தா அணி கோப்பையை கைப்பற்ற காரணமாக இருந்த அந்த அணியின் ஆலோசகரான கௌதம் கம்பீரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வேண்டும் என்பதில் பிசிசிஐ உறுதியாக இருந்தது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கு கௌதம் கம்பீர் ஆர்வம் காட்டாத நிலையில் அவரிடம் பிசிசிஐ பேசியதாக தகவல்கள் வெளியானது.

ஒரு கட்டத்தில் கௌதம் கம்பீர் சம்மதம் தெரிவிக்கவே அவர் எப்போது வேண்டுமானாலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது அவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்க கவுதம் கம்பீரை வரவேற்கிறேன். நவீன கால கிரிக்கெட் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துடன், அதனை கவுதம் கம்பீர் மிக அருகில் இருந்து பார்த்துள்ளார். அவரது கிரிக்கெட் பயணத்தில் அவர் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டை அடுத்தக் கட்டத்துக்கு அவர் எடுத்துச் செல்வார் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறேன். இந்திய அணிக்காக அவர் தெளிவான திட்டத்தினை வைத்துள்ளார். அவரது அனுபவம் மற்றும் தெளிவான திட்டம் இந்த இரண்டும் அவரை தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான சரியான நபராக மாற்றியுள்ளது. இந்த புதிய பயணத்தில் பிசிசிஐ அவருடன் உறுதியாக துணை நிற்கும்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீர் 2027
ஆம் ஆண்டு வரை  பயிற்சியாளராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரராக செய்த சாதனையை இந்திய தலைமை பயிற்சியாளராகவும் சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tags :
Advertisement